புதன், 22 ஜூன், 2011

முனியாண்டிஒத்தைப் பனை முனியாண்டியைப்
பற்றிய திகில் கதைகள் கேட்டபின்
தனியே போக பயமெனக்கு..

காற்றிலாடும் பனையின் மட்டையும்
சருகுகளின் வழியூறும் ஊர்வனவும்
வெளித்தள்ளும்  பயத்தின் வியர்வைத் துளிகளை..

இரண்டாம் ஆட்டம் முடிந்து
அப்பாவுடன் திரும்பும் நேரம்
தூரத்து பனையின் உருவம்
காற்றிலோ மனதிலோ ஆடும் மெல்ல...

அடுத்த வீட்டு சரசுவும்
பக்கத்து தெரு பரமனும் 
அறை வாங்கி செத்துப் போனார்களாம்
உச்சி வெயிலில் திரும்பும் போது..

கறிச்சோறுடன் பள்ளி போகும்
நாட்களில் கரித்துண்டும்
தேய்ந்த லாடமும் துணை வரும் பையில்,
முனியாண்டியை எதிர் கொள்ள..

சிவராத்திரியும் செவ்வாய் சாத்தும்
தவிர தூரமே நிற்கச் சொல்லும்
உருவமில்லா முனியாண்டியின் பயபக்தி..

எப்போதும் காவி வேட்டியும் சிவப்புத் துண்டும்
கட்டிக் கொண்டு பூசை செய்யும்
பூசாரிக்கு மட்டும் ஒன்னுமே ஆகாதாம்..

பூசாரியின் தொடுப்பு சரசு வென்பதை
மிகத்தாமதமாக தெரிந்து கொண்டபின்
குழம்பித் தான் போனோம்,
முனியாண்டியைப் பற்றி நானும்
பூசாரியைப் பற்றி முனியாண்டியும்...