புதன், 11 மே, 2011

தேநீர் நேரம்வடிகட்டிய நரசுஸ் காப்பி
இல்லையென்றால் காலை 
விடியாது தாத்தாவிற்கு...
ஃப்ரூ போட்டு நுரைத்து 
ஆடையுடன் மித சூட்டில் 
வேண்டும் அண்ணனுக்கு...
"காப்பி கடும் விஷம், டீ கொடு" வென 
கேட்டு முடிப்பதற்குள் 
கிடைக்கும் அப்பாவிற்கு...
இருமித்தீர்க்கும் பாட்டிக்கு 
பாலோடு பனங்கற்கண்டும்...
தங்கைக்கும் எனக்கும் என்றும்
தவறியதேயில்லை  ஹார்லிக்ஸ்...
சுவை பார்க்க யாவற்றையும் 
குடித்துப் பார்ப்பாள்  கொஞ்சமாக...
இன்று வரை தெரியவில்லை,
நரசுஸா, ஃப்ரூவா
டீயா, பாலா, ஹார்லிக்ஸா 
என்ன பிடிக்கும் அம்மாவிற்கென?.