திங்கள், 18 ஏப்ரல், 2011

மீளாக் கனவின் மிச்சம்!வெறியேறிய கண்களும் 
குருதி ஒழுகும் பற்களுமாக 
பிணம் துழாவி 
பசியடங்காதுத் திரியும் 
நாயுரு கொண்ட பிசாசுகளின் 
நீண்ட துரத்தலின் முடிவில் 
எகிறித்துடிக்கும் 
நெஞ்சக் கூட்டின் அதிர்வில் 
நாளங்கள் வழி 
பாய்ந்தோடும் குருதியின் 
வெம்மைத் தவிப்பில் 
அனலாகிப் போன மூச்சின் 
வழி வெளியேறுகிறது, 
அமானுஷ்ய கனவின்
முடிவிலா சூனியம்..
உறக்கம் திறந்து கிறங்கிக் 
கிடந்த உடலில் முறுக்கமேற 
ஊர்ந்து அலைகிறது 
கனவிலுண்ட தீரா
தாகத்தின்  எச்சம்..
உண்ட வேட்கை 
ருசித்துக் கிடக்க 
உவகை மீண்டும் நா சுழற்ற 
இறு(க்)கித் தழுவி எனை
உள்ளிழுத்துக்  கொண்டோடுகிறது
மீளாக் கனவின் மிச்சம்!
பட உதவி : Google image


      

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

தேவதை விளையாட்டு..

அம்மாவின் அரட்டலை அனுமதியாது
வீழும் நீர்த்துளிகளை
பிஞ்சுக் கைகளால் சிதறடித்து 
தேங்கும் நீரை திசையெங்கும் 
கால்வீசி திருப்பி விட்டு 
சின்னக் கூந்தல் காற்றில் சுழற்றி
கேட்கும் இடியின் தாளத்திற்கு 
குதித்தாடும் ப்ரிய மகளின்
நடனத்தின் பார்வையாளனாக 
மாறிப் போனோம் நானும், 
கொட்டுமிந்த மழையும்!

**********************************************************************************நீர்த் தொட்டியில் விளையாடி 
வெளிறிய கைகளும் 
ஈரமேறிய உடையும் 
குறும்புச் சிரிப்புமாக 
நிமிடக் குதூகலம் கொண்டு 
எனை சுற்றி ஓடி விளையாடி 
கைகளால் கன்னங்கள் 
தாங்குகிறாள் என் பிரிய மகள்.. 
விரல்களின் குளுமை கன்னத்திற்கும் 
பிரியத்தின் குளுமை மனதிற்கும் 
கடத்துகிறாள் ஒருசேர..

**********************************************************************************பொம்மை விளையாட்டில் 
குளிப்பாட்டி சோறூட்டி 
தாலாட்டி தூங்க வைக்கும் 
பிரிய மகளின் செய்கையை 
ஆர்வமுடன் கவனிக்கிறேன் நான்.. 
அவள் தூங்கியதும் முடியொதுக்கி 
கன்னத்தில் நான் பதிக்கும் 
முத்தச் செய்கையை 
பொம்மைக்கும் செய்கிறாள் 
எனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே..