செவ்வாய், 22 மார்ச், 2011

பின்னிரவிற்குப் பின்..

தனிமையிரவில் துணையாய் எரிந்த
மெழுகுவர்த்தி விட்டுச் சென்றது 
நினைவுகளின் படிமங்களை...

அவசரத் தேவைக்கோ அந்தப்புரத்திற்கோ
விளக்குகள் ஒளிர்ந்து அணைகின்றன
எதிர்வீட்டில்..

மின்னும் நட்சத்திரங்களுக்கிடையே 
துள்ளி யோடி விளையாடுகிறது 
வால் முளைத்த ஒன்று.. 

ஒன்றின் பின் ஒன்றாக, பின் 
ஒன்றாக ஒன்றின் பின், கூவ 
காத்திருக்கின்றன பறவைகள் 
மேகமோ வானமோ சிவக்க..

வழியும் வியர்வைகளில் எரிச்சலோடு 
வெளியேறுகிறது நேற்றைய நிகழ்வுகளின்
வெறுப்பின் எச்சங்கள்..

இருட்டில் தாழ் திறந்து தலை கவிழ்ந்து 
அமைதியாய் வெளியேறுகிறது, 
காத்திருந்து நிகழாத கனவொன்று.. திங்கள், 7 மார்ச், 2011

பெயரில் என்ன இருக்கிறது?!


அன்புச்  சகோ அகிலா ஒரு சுவாரசியமான தொடர்பதிவு ஒன்றை ஆரம்பித்திருந்தார் அது "பெயர் காரணம்".   பள்ளியில் படிக்கும் போது  தமிழ் இரண்டாம் தாளில் வரும் "பெயர்ச்சொல்" விளக்கம் தருக என்பது போல கேள்வி இருந்தாலும் அதற்கு பதிலளிப்பது போல இரண்டு வரியிலா சொல்ல முடியும்? சரி சரி எதுக்கு இந்த பில்டப்? மேட்டருக்கு போயிடுவோம். அதுக்கு முன்னாடி  ஆர்விஎஸ்  அண்ணாவுக்கும், கோபிக்கும்   நன்றி சொல்லிக் கொள்கிறேன்,
என்னை இதற்கு  அழைத்ததற்கு.

என் முழுப் பெயர் பாலாஜி சரவண கணேஷ்!    அடக்கி வைத்திருந்த மூச்சை கொஞ்சம் வெளிவிடுங்கள். என்ன மூன்று பேருக்கு வைக்க வேண்டிய பெயரை என் ஒருவனுக்கேவா என நீங்கள் நினைக்கலாம், என்ன நினைக்கலாம்? அதே தான? இதை தொடருவதற்கு முன் ஒரு சின்ன கட். எல்லாரும் சேது படம் பார்த்திருப்பீங்க அதில் விக்ரம், அபிதாவிடம் உன் பெயருக்கு அர்த்தம் என்னவென்று கேட்டதும் அவர் அப்பாவிடம் கேட்பார் இப்படி, 

அபிதா : ஏம்ப்பா நேக்கு இந்தப் பேர் வச்சேள்?
அப்பா : எது? அபிதான்ன?
அபிதா : அபிதகுஜலாம்பாள் ன்னு
அப்பா : அது உன்னோட பாட்டியோட  பெயரோல்லியோ அதான்!. அதற்கப்புறம் சில பல காரணங்களும் சொல்லுவார்!

இதே மாதிரி நானும் என் தாத்தாவிடம் ( அம்மாவின் அப்பா ) கேட்டேன். ஏன் தாத்தாவென நினைக்கும் அன்பர்களுக்கு, நான் பிறந்தது முதல் எனக்கு எல்லாமுமாய் இருந்தது என் தாத்தா தான், அவர் தான் எனக்கு பெயரும் வைத்தவர்.

"ஏன் தாத்தா எனக்கு இந்த பெயர வச்சீங்க?"

"ஏன் இந்தப் பெயருக்கு என்ன ?"

"இல்ல மூணு பேருக்கு வைக்கிற பெயர எனக்கு மட்டுமே வச்சிருக்கீங்களே அதான், கூட படிக்கிற பையன்களெல்லாம் கேலி பண்றாங்க தாத்தா"

"கேலி பண்றவங்கள பத்தி கவலைப் படாத, கடவுளோட பெயர் தான? இதுவும் நல்ல பெயர் தான்னு சொல்லு, உன் பேரு உள்ள வேற யாரவது இருக்காங்களான்னு கேளு."

"சரி கேக்குறேன், நீங்க சொல்லுங்க எனக்கு ஏன் இந்த பேர் வச்சீங்க?"

அவர் காரணம் சொல்லத் தொடங்கினார்.

என் அம்மா தான் வீட்டில் மூத்தவர், நான் அம்மாவிற்கு முதல் குழந்தை. ஸோ அம்மாவின் வழிக் குடும்பத்தில் முதல் குழந்தை நான். என் பாட்டியின் ( அம்மாவின் அம்மா ) இஷ்ட தெய்வம் திருப்பதி பாலாஜி.  அம்மா என்னைக் கருவுற்றிருந்த நேரம் பிறக்கும் முதல் குழந்தை ஆணாக பிறக்க வேண்டுமெனவும்  அப்படிப் பிறந்தால் பாலாஜி என பெயரிடுவதாகவும் வேண்டிக்கொண்டார். வேண்டுதலோ அல்லது X Y குரோமோசோம்களின் விளையாட்டின் படியோ பிறந்தேன் நான். அதனால் பாலாஜியும் ஆனேன். 

பாலாஜி ஓகே அது என்ன சரவண கணேஷ்? வர்றேன் வர்றேன். என் அப்பா ஒரு முருக பக்தர். சரவணா என்ற பெயர் மீது அவருக்கு விருப்பம் அதிகம். சிறு  வயதில் என்னை சரவணா என்றே கூப்பிட்டுள்ளார். அப்பாவின் வழி உறவுகளுக்கு சிறுவயதில் நான் சரவணா தான். என் கசின் ஒருவனின் பெயரும் சரவணா என்பதால் குழப்பத்தை தவிர்க்க பின்பு நான் பாலாஜி ஆனேன்.

அம்மாவின் இஷ்ட தெய்வம் கணேஷ். அவருக்கு கணேஷ் என வைக்க ஆசை போல, அவர் என்னை கணேஷ் என்று கூப்பிட்டதில்லை அனால் தாத்தாவிற்கு தெரியும் அம்மாவின் விருப்பம்.

பள்ளி செல்லும் வரை அவரவர்கள் அவரவர்களுக்கு பிடித்த பெயரில் என்னை கூப்பிட்டார்களாம். பள்ளியில் சேர்க்கும் பொழுது யார் விருப்பத்தையும் ஒதுக்காமல் என் பெயரை பாலாஜி சரவண கணேஷ் என ரெஜிஸ்டரில் சேர்த்தார் என் தாத்தா. நல்ல வேலை என் தாத்தாவின் விருப்பப் பெயரான "வெங்கட் ராகவன் " என்பதை சேர்க்கவில்லை. அந்த மட்டுக்கு நான் தப்பித்தேன். இல்லாவிட்டால் "வெங்கட் ராகவ பாலாஜி சரவண கணேஷ்" ஆகியிருந்திருப்பேன்! ( உஷ் அப்பப்பா! கண்ணைக் கட்டுதே! ) என் தாத்தா ஒரு இடைநிலை ஆசிரியர் என்பது இதில் ஒரு முரண் நகை! :)

பாலாஜி, பாலாஜி சரவணா, சரவணா, சரவண கணேஷ் என அவரவர்க்கு பிடித்த பெயர்களில் என்னைக் கூப்பிடுவார்கள். இப்பொழுது என் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் என்னை பாலா என அழைக்கிறார்கள். சில நட்புக்கள் இன்னும் யுனிக்காக baals, balaj, BS என அழைப்பதும் உண்டு. என் பெயரைக்  கேலி செய்யாமல் எப்படி அழைத்தாலும் எனக்கு மகிழ்ச்சியே! :)   

 இது தான் மக்களே என் பெயர்க் காரணம். படிக்கும் பொழுது என் பெயரால்  சில பிரச்சனைகளை சந்தித்திருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் என் பெயர் எனக்கு பிடித்துப் போகவும் செய்தது.  ஆங்கிலத்தில் எழுதினால் இருபது எழுத்துக்கள். சில சமயம் சில Form பூர்த்தி செய்யும் பொழுது போதுமான கட்டங்கள் இல்லாமல் நானே சில கட்டங்கள் வரைந்ததுண்டு. என் பெயரே எனக்கு சில நண்பர்களையும்  பெற்றுத் தந்துள்ளது. 

ஒரு முறை நான் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் போது என்னைகான வந்த பாட்டியும் தாத்தாவும் நான் எங்கிருக்கிறேன் என அருகில் இருந்த பையனிடம் (அவன் பார்வைத் திறன் இல்லாதவன் )  என் முழுப் பெயரையும் சொல்லாமல் வெறும் பாலாஜி என்று சொல்லி  கேட்டிருக்கிறார்கள். அவன் என் முழுப் பெயரையும் சொல்லி, நான் எங்கிருக்கிறேன் என்பதையும் சொல்லியிருக்கிறான். அவன் என் ஹாஸ்டல் தான் ஆனாலும் முன்பு அவனிடம் நான் பேசியதேயில்லை. இந்த நிகழ்விற்கு அப்புறம் அவன் என் நண்பனானான். என் பெயர் அவனுக்கு பிடித்திருப்பதாகவும் சொன்னான். 


சில இடங்களில் என் அப்பாவின் பெயரையும் ( சீதா ராமன் )  சேர்த்து எழுதவேண்டியிருப்பதால், என்னைக் அழைக்கும் போது அவர்கள் படும் சிரமம் சொல்லிமாளாது! ( எதோ நம்மளால முடிஞ்சது :) ) சில கம்பெனிகளில் முழுப் பெயர் மற்றும் அப்பாவின் பெயர் சேர்த்துத்தான் மெயில் ஐடி உருவாக்குவார்கள் என நண்பன் சொல்லியிருக்கிறான். அதை எனக்குப் பொருத்திப் பார்க்க, ஐயோ! முடியல! :) 

என் பெயரின் நீளம் மற்றும் பாலாஜி என்பதை வைத்து நான் ஆந்திராவைச் சேர்ந்தவனா  எனவும் கேட்டிருக்கிறார்கள். # தமிழன்டா நான் :)
எனக்கு தெரிந்து இந்தப் பெயர் கொண்டுள்ள இன்னொருவரை  நான் இதுவரை  கேள்விப் பட்டதில்லை. என்னைச் சந்திக்கும் பல பேர் முதலில் கேட்பது,  "நீங்க நியூமராலாஜி படி பெயர் வச்சிருக்கீங்களா?" என்பது தான். பின்பு அவர்களிடம் விளக்குவேன் மேற்கூறிய கதையை! :) என்னதான் சில சில சங்கடங்கள் இருந்தாலும், என் பெயரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் என் பாட்டி மற்றும் தாத்தாவின் நினைவு வருமே என் வாழ்நாள் முழுவதும், அதற்காகவே இந்தப் பெயர் இன்னும் பிடிக்கிறது!

இதைத் தொடர நான் அழைப்பது 

தேனம்மை அக்கா  ( எவ்வளவு இனிமையான பெயர்! )

அனைவரும் என் அழைப்பை ஏற்று எழுதவேண்டுகிறேன்!  ( "மாட்டிவிட்டுட்டு வேண்டுறியா நீ?!"   அப்படின்னு நீங்க கேக்குறது என் காதுல விழல ) :)படம் உதவி : கூகிள் 
செவ்வாய், 1 மார்ச், 2011

பகை வளர்ந்த காலம்

முதிராப் பேச்சுக்களில் புரிந்த 
பாதி உண்மைகளும், சொல்லாத சொற்களில் 
தெரிந்த பாதி ப்ரியங்களும்
கண்ணாமூச்சியாடின அப்பருவத்தில்..

சிறு நிகழ்வில் கிழித்துப் போட்ட 
அமைதியும், தூரமாகிப் போன நட்பும் 
இன்னும் அலைந்து கொண்டிருக்கிறது
நம் தெருக் காற்றில்..

அடிபட்ட பொழுதில் நான் சிந்திய
இரத்தத்துளிகளில் சேர்ந்து 
மண்ணில் வீழ்ந்தது நம் புரிதல்..

தவிர்த்த சந்திப்புக்களிலும் 
தவறிய அழைப்புக்களிலும்
தவறாது வளர்ந்து கொண்டிருந்தன 
நம் இடைவெளிகள்..

சேர்ந்த தகவல்களின் வழி 
நிலை தெரிந்து திரை கிழிக்கிறது 
காலமும் பக்குவமும்..

காலத்தின் வேகத்தில் காயங்கள் காய்ந்தாலும்
முகம் நோக்கும் நாட்களில்
பார்வை திரும்பிக் கொள்கிறது
சலனங்கள் ஊமையாகி நிற்கும்போது..