திங்கள், 14 பிப்ரவரி, 2011

ப்ரியங்களின் மோக விளையாட்டு..

வாசலில் உன் வருகையை கவனியாதுபோல் 
உள் வேலையில் மூழ்குகிறேன் 
திமிரும் என் மனதை கட்டியிழுத்து வந்து 
காலடியில் போடுகிறது உன் ப்ரியம்..


சாலைப் பூக்களின் அழகில் மயங்கி 
நின்று சற்று ரசிக்கிறாய் ; பூக்களின் 
மேல் நின்றாடும் பட்டாம்பூச்சிகளும் 
பறந்தாடும் தென்றலும் திகைத்துத்
திரும்புகின்றன உன்னை நோக்கி!  


வீரிட்டு அழும் எதிர் வீட்டுக் குழந்தையை
அள்ளியெடுத்து கொஞ்சி சமாதானப் படுத்துகிறாய் நீ!
குழந்தை நிறுத்தியதும் அலறத் தொடங்கியிருக்கிறது 
என் மனது..


"தட்டுங்கள் திறக்கப்படும்"
பொய்யாக்கிப் போனாய் ; ஆம்
ஒருபோதும் சாத்தப் படுவதேயில்லை 
உன் ப்ரியத்தின் வாசல்கள்! கடற்கரையில் உன் வெண் பாதக் குழிகள்
தேடித் தொடர்கிறேன் நான்
போட்டிக்கு வந்து நிற்கிறது கடலலை..

கூந்தலில் சிக்கிய துப்பட்டாவை
பூக்கள் பின்னும் நளினத்துடன்
விடுவிக்கிறாய், தீவிரமாய் முகம்
வருடுகிறது, என்னைப் போல!..பின் மாலைப் பொழுதில் நாம்
அமர்ந்திருந்த மாடிப் படிகளில்
ஏறியிறங்கி விளையாடுகிறது 
நம் காதல் நிலா!


விரல் பின்னி தோள்சாய அமர்ந்து
மெல்லப் பேசிச்  சிரிக்கும் பொழுது
பூவுதிர்க்கிறது  மரம்..
நீ சூட.. நான் சூட்டிட!.. 


நீ பரிசளித்த சட்டைகள் அணிந்த
நாட்களில் தவறாது வந்து விடுகிறது மழை
உன் முத்த ரேகைகள் கவர்ந்து கொள்ள..உட்சென்று வெளியேறவியலா
கண்ணாடி அறை போல
உன் ப்ரிய அலைகளால் பின்னப்பட்ட
பெருவெளியில் சுற்றியலைகிறேன் நான்!..


பார்வையால் பதியன் போட்டு 
புன்னகையால் செப்பனிட்டு 
அன்பால் வேர் விட்டு 
கொடி சுற்றி இதழ் விரிக்கச் செய்தாய்  
காதல் மலரை என்னுள் நீ!நாம் கட்டியணைத்து முத்தமிட்ட 
கைபிடித்து உடலுரசி 
நடந்து சென்ற இடங்களில்
இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது
நம் ப்ரியங்களின் மோக விளையாட்டு..

டிஸ்கி :  அன்பான என் பதிவுலக உறவுகளுக்குச் சமர்ப்பணம்!  ;)
படவுதவி : Google Image

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

ப்ரியமானவளுக்கு..என் மனத் தாளில் உன் நினைவுருக்கி வார்த்த 
ப்ரியத்தின் நேசங்களை வார்த்தையுருக் கொடுத்து 
வந்தடையச் செய்கிறேன் உன்னிடம்..

ப்ரியத்தை வார்த்தைகளால் 
வகைப்படுத்த முடியாதெனினும்
ப்ரியத்தின் புறத்தாளினையாவது
சுமந்து வரும் இவ்வார்த்தைகள்..

உனக்காக எழுதத் தொடங்கும் போது
முண்டியடிக்கும் வார்த்தைகளில்
வல்லினம் தவிர்த்து மெல்லினம் தேடி
இனிமை குழைத்து முத்த முத்திரையிடுகிறேன்..

நான் எழுதிய வார்த்தையுடல் 
உன்னைக் காண வரும்பொழுது
எப்போதும் அழகிய கவிதையுடை 
அணிந்து கொண்டு விடுகிறதே! 

நீ உச்சரிக்கும் நேரம் உயிர் கொண்டும்
உன்னைச் சுற்றியலையும் 
இதழ் பூக்கள் தேடும் பட்டாம்பூச்சிகளாய்..

சற்றே விழியுயர்த்தி ப்ரியத்தின் புன்னகையை
மெல்லிதழில் இருந்து இறக்கி விடு
காற்றிலாடும் என் வரிகள் உன் ப்ரியத்தை
பூப்பல்லக்கில் சுமந்து என்னிடம் சேர்ப்பிக்கும்..

உடல் தூரமிருந்தும் இடைவெளியில்லை நினைவிற்கு
புத்தி தெறிந்தும் உணரவில்லை மனது.
அகக் கண்களால் ஆராதனை செய்த உன் அழகை
புறக்கண்களும் கண்டு பேருவகை அடைய வரம் கொடு.

சின்னப் பார்வையால் சிந்தை சிறைப் படுத்தி
சிக்குறச் செய்யும் வித்தைக்காரியிடம்
வசமிழக்க சித்தமாயிருக்கிறேன் நான்..

நம் சந்திப்புகளின் போது அலுக்காத
ஜாலங்கள் காட்டும் ப்ரியத்தின் நடனத்தைக் காண
காத்திருக்கிறேன்; மறுமொழியிடு சீக்கிரம்!டிஸ்கி : இது இந்திரா அழைத்த தொடர்பதிவிற்காக! நன்றி இந்திரா :)


படம் உதவி : google image