புதன், 26 ஜனவரி, 2011

தரிசனம்..


நெற்றித் திருநீறுடன் புத்தகப் பை தோளாட
குறையேதுமிருக்குமோவென மீண்டும்
கோவில் நோக்கி கும்பிட்டு
கையிலிருந்த ஜாமென்ட்ரி பாக்ஸை
பற்களால் மெல்லத் திறந்து
மயிலிறகிற்கிடையே இருந்தெடுத்த
நாணயமொன்றை திரும்பி
அமர்ந்திருந்த வயதான
பிச்சைக்காரியிடம் கொடுத்து
எனைக் கடக்கும் நேரம்
அழைத்துப்  பெயர் கேட்டேன்
சீருடையணிந்த சிறுமியிடம்..
மெல்லச் சிரித்து தலை நிமிராமல்
ஜடையாடியபடியே ஓடிச் சென்றாளவள்
என்ன பெயரேனும் இருந்து விட்டு போகட்டும்
அன்பின் தேவதைகளுக்கு!


                                                  

புதன், 19 ஜனவரி, 2011

பின்னொரு பொழுதில்..
உன் மௌனத்தோடு பேசிக்கொண்டிருக்கிறேன்
தீராத சொற்கள் இன்னும் மீதமிருக்கின்றன..

உன் புன்னகையோடு போரிட்டுக் கொண்டிருக்கிறேன்
எப்போதும் சரணடைகிறவனாகையால்
வெற்றி தோல்விகளில் கவனமில்லை எனக்கு..

சுற்றியலையும் உன் பேச்சுக்களோடு
கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறேன்
நான் பிடிபட்டுவிடும் தூரம் தான்..

பிம்பத்தின் அணைப்புகளில் சொக்கிக் கிடக்கிறேன்
தேகமெங்கும் உன் முத்த மணங்கள்..

உன் தேகமிசை பரவுகிறது எங்கும்
கவர்ந்து செல்ல காத்திருக்கிறது காற்று..

அசையாத திரைச் சீலை பின்னே
அரங்கேறுகிறது காதல் நிழலின் நடனம்..

வீடெங்கும் சிதறிய ப்ரியத் துண்டுகள்
சேகரித்துக் கொண்டிருக்கிறேன் எப்படியாவது
உன்னுருவம் படைத்துவிட!                        

வியாழன், 6 ஜனவரி, 2011

சில நினைவுகள் - 2010

ஆண்டுகள் கடந்தாலும் சில நிகழ்வுகள் நிழல்களாய் நினைவுகளாய் படிந்து போகும் மனதில். அன்புச் சகோ கௌசல்யா கடந்த வருடத்தின் முக்கிய நிகழ்வுகள் பற்றி எழுத ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்கள். அவர்களுக்கு என் நன்றி!
தனித்தனி தலைப்புகள் இல்லாவிடினும், சகோ ஆமினா தொகுத்தது போல் மாதவாரியாக பட்டியல் இடாவிட்டாலும்  சில மறக்க முடியாத நிகழ்வுகள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள எனக்கும் மகிழ்ச்சி தான்.

இந்திரா மற்றும் மகி அழைத்திருந்த தொடர் பதிவுகள் எழுத சற்று தாமதமாகுவதால் அவர்கள் என்னை மன்னிக்க! வெகு சீக்கிரம் எழுதிவிடுகிறேன்.
பலவகை வானவெடிகள் வெடிப்பதை கழுத்து வலிக்க திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருக்கும் போது பிறந்தது கடந்த வருடத்தின் புத்தாண்டு நாள். அதனால் தான் இப்போது தலை திரும்பாமல் நினைவுகள் மட்டும்  திரும்பி சம்பவங்கள் கோர்க்கிறேன்! 
கடந்த ஆண்டு நிகழ்வில் முதலாய் நினைவில் வருவது தங்கையின் திருமணம். ஒரு பொறுப்பான அண்ணனாக ( தங்கை ப்ளாக் படிக்க மாட்டா, அதனால என்ன வேணா சொல்லிக்கலாம்  ;) ) ஜூன் மாதம் அவள் திருமணம். ஆல் இன் ஆல் அழகு ராணியான என் சந்திரா அத்தை ( அப்பாவின் தங்கை ) திருமணத்திற்கு தேவையான எல்லா விஷயங்களையும் தேவைகளையும் ஒற்றை ஆளாய் இருந்து கவனித்துக் கொண்டார். பத்திரிகை கொடுக்கவும் சில பண பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே என் இருப்பு அங்கே தேவைப் பட்டது!  அதற்கே எனக்கு பெண்டு கலண்டுடுச்சு ;) குறைகள் பெரிது படுத்தப்படாமல் திருமணம் இனிதே நடந்தேறியது. அன்புள்ளங்களின் ஆசியுடன் தங்கையின் மணவாழ்வு மகிழ்ச்சியாய் தொடர்கிறது.
திருமணத்திற்கு எடுத்த முப்பது நாள் விடுப்பு உள்ளங்கை மூடிய தண்ணீராய் வழிந்து போனது சந்தோசக் குளுமையும் தவிப்பின் வெம்மையும்  கொடுத்து! திருமணத்திற்கு பின் நடந்த ஒரு நிகழ்வில் மிகவும் மன உளைச்சல் அடையப் பெற்றேன்.  அந்த நிகழ்வின் வழி அன்பின் வார்த்தைகளும், சுற்றத்தின் உள்முகங்களும் அறியப் பெற்றேன். அந்நிகழ்வைப் பற்றி மேலும் விவரிக்க தயங்குவதால் விவரம் வேண்டாம்.என் பிரிவு கவிதைகளுக்கும், வலி மிகும் நினைவுகளுக்கும் அந்த நிகழ்வே  காரணம். அதிலிருந்து மெல்ல மீண்டெழுந்து கொண்டிருக்கிறேன்.  பதிவுலகம் அந்த நிகழ்வை மெல்ல மறக்கச் செய்து கொண்டிருக்கிறது என்பது உண்மை.

பணிக்கு திரும்பிய பின் ஒரு வெயில் தாழ்ந்த மாலையில் ஆரம்பித்தது தான் இந்த வலை பூ! அன்றைய நாள் ஜூலை ஒன்று! 
கடந்த ஒரு வருடமாக அவ்வப்போது வலை மேய்ந்தாலும், அப்போது தமிலிஷ் வழி பிரபல இடுகைகளும், எழுத்துலக  மும்மூர்த்திகள் வலை பக்கமும் அவ்வப்போது சென்று வருவது மட்டுமே நிகழ்ந்து கொண்டிருந்தது.  எழுத வேண்டுமென்கிற உத்வேகம் ஏனோ வரவேயில்லை அதற்கு காரணம் இரண்டு. முதலாவது என்ன எழுதுவது?! எவ்வளோவோ பேர் சிறப்பாக எழுதிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களை திரும்பிப் பார்க்க வைக்க இயலாவிடினும்,  உப்புக்குச் சப்பாணியாய் "நானும் இருக்கிறேன்" என்கிற நிலையிலாவது இருக்க வேண்டாமா என்கிற நினைப்பு!  
இரண்டாவது, பிறந்தது முதல் கவச குண்டலமாய் இருக்கும் என் சோம்பேறித் தனம்! ( ஆறு மாதத்தில் இதுவரை ஐம்பது பதிவுகள் தான் ) சரி ஆரம்பித்தாயிற்று என்ன எழுத? ஏதோ கொஞ்சம் நமக்குத் தெரிந்த, கவிதை என்று சொல்லுவதற்கு அரைமனதுடன் ஒப்புக்கொள்ளும் நிலையில் இருக்கும் வார்த்தை கோர்வைகளை எழுத ஆரம்பித்தேன்!  மெல்லச் சேரும் துளிகளென நட்புகள் சேரத் தொடங்கினார்கள்! 
ஆரம்பத்தில் பல நண்பர்களை ( என் பதிவுகள் படிப்பவர்களும், படித்து பின்னூட்டமும் இடுபவர்கள், வாக்கிடுபவர்கள் என அனைவரும் ) மெயிலில் கூட நான் தொடர்பு கொண்டதில்லை. இப்போது தான் ஒரு சிலரை மெயிலின்  வழியும் சாட்டின் வழியும் தொடர்பு கொள்கிறேன். ஆரம்பத்தில் நான் ஒருமுறை கூட தொடர்பு கொள்ளாத தேவா அண்ணா என் ஒரு கவிதையை படித்துவிட்டு நான் அவரது ரத்தம் என எண்ணியதாக பின்பு பேசுகையில் குறிப்பிட்டார். எனக்குள் மகிழ்ந்த அந்த தருணம் இன்னும் நினைவில். நன்றி தேவா அண்ணா!
பிரபலங்களுடன் இதுவரை பேசிய பழகிய அனுபவம் இல்லாததால் தான் நண்பர்கள் பலரை தொடர்பு கொள்ளாததற்கு காரணமேயன்றி வேறொன்றும் இல்லை. புரிந்த நட்புகள் அனைவரையும் என் நட்பு வட்டத்திற்குள் வைக்க ஆசை!  வரும் ஆண்டு அந்த ஆசையை பூர்த்தி செய்யும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

வாழ்க்கை தேவைகளுக்கும் வசதிகளுக்கும் சொந்த ஊரை விட்டு மதுரையில் குடியேறினோம் பிப்ரவரியில் . மதுரை எனக்குப் புதிதில்லை, நான் பிறந்த மிஷன் மருத்துவ மனையும் , சொந்தங்களும், நட்புகளும், கோவிலும், என் கல்லூரியும், ஒரு வருடம் (ஆறாம் வகுப்பு மட்டும்) படித்த செயின்ட் மேரிஸ் பள்ளியும்,  எப்போதும் என் மனதின் ஓட்டத்தில் ஆழப் படிந்திருக்கும்.

ஒன்பது ஆண்டுகள் கழித்து சந்தித்த பதின்ம வயதின் நண்பனும், அன்று பின்னிரவு வரை நீண்டிருந்த பேச்சுக்களும் என்றும் நினைவில் இருக்கும். நெருங்கிய நட்புக்களின் திருமணங்களும், சில நட்புகள் கிடைக்கப் பெற்ற குழந்தைகளும், சில நட்புகளின் பிரிதல்களும் கடந்த  ஆண்டின் நிகழ்வுகளில் சில. மெல்ல அவிழும் மொட்டைப் போல சில நினைவுகள் பூக்கும் தருணங்களும், நினைத்து வருந்தும் நிகழ்வுகளும் நடந்த கடந்த ஆண்டு ஒரு படிப்பினையை விட்டுச் சென்றுள்ளது. இந்தப் படிப்பினை வரும் ஆண்டுகளின் நிகழ்வுகளை எதிர் கொள்ள உதவும் என்ற நம்பிக்கையுடன் இதை நிறைவு செய்கிறேன்.

வழக்கம் போல தொடர் பதிவைத்  தொடர நட்புக்களை அழைக்க வேண்டுமென்கிற விதிமுறையால் நான் அழைக்க விரும்புவது:

சுபத்ரா 
சுசி
கல்பனா
"ஹைக்கூ அதிர்வுகள்"  ஆனந்தி 
இந்திரா 
சித்ராக்கா
ஆர்விஎஸ் அண்ணா
பாலா
நல்லநேரம் சதீஷ் 
அருண்பிரசாத் 

அனைவரும் என் அழைப்பை மறுக்காமல் ஏற்று எழுத வேண்டுகிறேன் :)


  

திங்கள், 3 ஜனவரி, 2011

சிதறல்கள் 3

பிரியத்தின் இதம் கோர்த்த 
வார்த்தைகளின் தொட்டிலில் 
சுகமாய் உறங்குகிறது 
நம் காதல் குழந்தை! 


உன்னை அழைக்க 
உதடு வரை வந்த உன்பெயரை 
சொல்லாமல் விழுங்குகிறேன்
பெயர் கூட என்னை 
விட்டு விலகாமலிருக்க..


அதிரும் சத்தத்தில் 
வார்த்தைகள் வீசுகிறேன் 
வாகாய் முன்னேறி 
முத்தப் பூக்கள் வீசுகிறாய் 
தலை கவிழ்ந்து சரணடைகிறது 
என் கோபம்..


எனக்கெனவோ உனக்கெனவோ 
பெய்வதில்லை மழை! - எனினும் 
உன்நினைவு பொழியத் 
தொடங்குகிறது இம்மழை இரவில்..


நீண்ட மழையிரவில் 
எனைப் போர்த்தி படுத்திருக்கும் நீ
உன் விரல்களின் வழி 
எனக்குள் கடத்துகிறாய் 
ப்ரியத்தின் வெம்மையை..


தலை கோதி கண்சொருகி 
மார்பின் குறுக்கே கைபின்னி
மெல்ல இழைந்து இதழ் குவித்து 
கொஞ்சிக் கூப்பிடும் குரலில் ஒருசேர
சவால் விடுகிறாய் மயிலுக்கும் குயிலுக்கும்..


வாடிக் களைத்து வந்த நேரத்தில் 
அதிரடியாய்  ஆக்கிரமித்து 
முத்தச் சண்டை தொடங்குகிறாய், 
களைத்து ஓய்கிறது என் களைப்பு!