செவ்வாய், 28 டிசம்பர், 2010

பத்தாண்டுகளில் பத்துப் பாடல்கள் - தொடர்பதிவு

அன்பு நண்பர் பாலா கடந்த பத்தாண்டுகளில் பிடித்த பத்து  பாடல்களை தொகுக்கும் தொடர் பதிவிற்கு அழைத்திருந்தார். அவருக்கு என் நன்றி.

தமிழ் திரையிசைப் பாடல்களை கேட்டு வரும் ஒரு சாதாரண ரசிகனாய், விமர்சனப் பார்வையில்லாது ஒரு சின்ன யோசிப்பில் விளைந்த ஒரு சிறு கணக்கீடு.

தமிழில் வருடத்திற்கு சராசரியாக சுமார் நூறு படங்கள் வெளியாகின்றன. படத்திற்கு சராசரியாக ஐந்து பாடல்கள் எனக் கணக்கிட்டால் ஐநூறு பாடல்கள் வருடத்திற்கு. அவற்றுள் ஐம்பது சதவீதப் பாடல்கள் பல்வேறு காரணங்களால்  வெளிவந்த சுவடே தெரியாமல் போய்விடுகின்றன. மீதமுள்ள ஐம்பது சதவீதத்தில் இருபது சதவீத பாடல்கள் அதாவது ஐம்பது பாடல்கள் முதல் முறை கேட்டவுடன் மக்கள் மனதில் இடம் பிடிக்கின்றன. அடுத்த பத்து சதவீதப் பாடல்கள் சேனல்களின்  இடைவிடாத நச்சரிப்பால் ( கொலைவெறியை கிளப்பும்  பாடல்களும் ) ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்து தொலைகின்றன.
அதாவது வருடத்திற்கு சுமார் எழுபத்தைந்து பாடல்கள். பத்து வருடங்களில் எழுநூற்று ஐம்பது பாடல்கள் ;)
என்ன மயக்கம் வருதா? சரி இசை கொண்டு  தெளிய வச்சுருவோம்! ;)

இப்பதிவில், மெல்லிசை, மயக்குமிசை, கிராமிய இசை, குத்துப் பாட்டுக்கள், ரீமிக்ஸ் பாடல்கள், கொலைவெறிப் பாடல்கள் தவிர்த்து துள்ளலிசை பாடல்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன். உங்களுக்கும் பிடிக்கும் என.

1.யாக்கைத் திரி, காதல் சுடர் - ஆய்த எழுத்து - 2004

மனதை மயக்கும் மெல்லிசை எவ்வளவு மகிழ்ச்சி தருமோ அதேபோல் சில துள்ளலிசைப் பாடல்களும்  குதூகலம் தருபவை, அவற்றுள் எப்போதும் முன்னால் நிற்பது இப்பாடல். ஆஸ்கர் நாயகன் ரகுமான் இசையமைத்து அவருடன் சுனிதா சாரதி சேர்ந்து  பாடிய பாடல். இப்பாடல் வைரமுத்துவின் கவிதைத் தொகுப்பிலுள்ள ஒரு கவிதையின்  சிலவரிகள் மட்டும் இடம்மாற்றி உருவாக்கப் பட்டது. மழை ஓய்ந்தபின்பும் சாரல் தொடர்வது போல பாடல் முடிந்தும் அதன் அதிர்வு தொடரும் நாளெல்லாம்.

2.ஓராயிரம் யானை கொன்றால் - நந்தா - 2001

மெல்லிசைக்கு பெயர்போன யுவன்சங்கர் ராஜாவின் ஆரம்ப கால பாடல்களுள் அதிர வைக்கும்  ஒன்று. இந்த வேகமிசைப் பாடலைப் பாடியது உன்னிக் கிருஷ்ணன் என்றால்  நம்புவது கொஞ்சம் கடினம் தான். உன்னிக் கிருஷ்ணனின் தேன்குரல், ஹை பிச்சில் செய்யும் மாயாஜாலங்களை மிஸ் செய்து விடாதீர்கள்.

3.தீபாவளி தீபாவளி - சிவகாசி - 2005

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் ஒரு வேகமிசைப் பாடல். பாடல் வரிகள் பற்றி உஹூம்..ஒன்றும் சொல்வதற்கில்லை,  பாட்டின் இசையில் இடையே  இட்டுநிரப்புவதற்காக மட்டும் தான். இப்பாடலை எழுதியது யாரென்று தெரியவில்லை அவருக்கு என் வருத்தம் கலந்த சாபங்கள்.


4.ஆல் டே ஜாலி டே - மனதை திருடி விட்டாய் - 2001

யுவன் ஷங்கர் ராஜாவின் மற்றொரு பாடல். ஷங்கர் மகாதேவன் மற்றும் யுவன் சேர்ந்து பாடியது.  கல்லூரிப் பருவத்து கவலையில்லா நாட்களின் நினைவுகள் இப்பாடல். Life is  a game show :)5.உயிரின் உயிரே - காக்க காக்க - 2003

ஹாரிஸ் ஜெயராஜின் ஆல் டைம் பேவரிட் இப்பாடல். தாமரை வரிகள் இன்னும் இன்னும் என கேட்கத் தூண்டும். படத்தின் தொடக்கத்திலே இப்பாடல் வந்துவிட்டதால் படம் முழுவதும் அந்த அதிர்வு இருந்து கொண்டே இருந்தது.6.சரோஜா சாமான் நிக்காலோ - சென்னை 600028 -  2007

மறுபடியும் யுவன். இம்முறை ஷங்கர் மகாதேவனுடன் பிரேம்ஜி அமரனும் அதிர வைத்திருப்பார்கள். எப்போதும் வெற்றிக் கூட்டணியான  யுவன் - வெங்கட் பிரபு கூட்டணியின் "மங்காத்தா"வுக்கு ஆவலோடு காத்திருக்கிறேன்.  இப்பொழுதெல்லாம் யுவனின் இசையில் மெல்லிசைப் பாடல்களே மிக அதிகமாய் வருகின்றன. அவர் ஒரு பேட்டியின் போது குறிப்பிட்டார், மெல்லிசைப் பாடல்கள் தான் காலங்கள் கடந்து நிற்குமென்று. அதனால் தான் அவர் இப்பொழுது வேகமிசைப் பாடல்கள் அதிகமாக உருவாக்குவதில்லையோ என்னவோ?7.சம்போ சிவா சம்போ - நாடோடிகள் - 2009

சுந்தர் சி பாபுவின் இசையில்  ஷங்கர் "மஹா" தேவன் பின்னிப்  பெடலெடுத்திருக்கும் வேகமிசைப் பாடல். கேட்கும் போதே உடம்பில் ஒரு வீறு எழுமே! அப்பப்பா!8.மாரோ மாரோ - பாய்ஸ் - 2003

ரஹ்மானின் மற்றொரு பாடல். ஆரம்பத்திலும் இடையிலும்  வரும் ட்ரம்ஸ் துள்ளவைக்கும் மனதை ;) ஷங்கர் தன்னுடைய படங்களில் கண்டிப்பாக ஒரு துள்ளலிசைப் பாடலாவது வருமாறு பார்த்துக் கொள்வார். அதை அவரது முதல் படத்திலிருந்து சமீபத்திய படம் வரை தொடர்ந்து  கொண்டிருக்கிறார்.9. பைவ் ஸ்டார் பைவ் ஸ்டார் - 5 ஸ்டார் - 2002


சிறகடித்துத் திரிந்த கல்லூரி பருவத்து நாட்களின் நட்பின் கைகோர்ப்பு இப்பாடல். அனுராதா ஸ்ரீ ராம் பாடியது. இப்பாடலுக்கு இசை பரசுராம் ராதா.

பாடல்கள் கேட்டாச்சா? கால்கள் தாளம் போடுதா இன்னும். என்ன, பத்து என்று சொல்லிவிட்டு  மேலே மொத்தம் ஒன்பது பாடல்கள் தான் இருக்குன்னு நினைக்கிறீங்களா? அந்த பத்தாவது பாடல் நீங்க சொல்வதற்காகத்தான். நான் குறிப்பிட இந்த மாதிரி துள்ளலிசை (அ) வேகமிசைப் பாடல்களில் கடந்த பத்தாண்டுகளில்  உங்களுக்குப் பிடித்த பாடல் ஒன்றை பின்னூட்டத்தில் சொல்லிவிட்டுப் போங்கள் அன்புள்ளங்களே!

பிறக்கும் புத்தாண்டு எல்லோருக்கும், எல்லாவகையிலும் கொண்டாட்டமாய் அமைய என் வாழ்த்துக்கள்!   Happy New Year :)


    

வெள்ளி, 17 டிசம்பர், 2010

பிரிவுத் துயர், இன்னும் கொஞ்சம்..மாலைச் சூரியன் மரித்த நேரம்
பிரிவின் சிலுவை சுமக்கலானோம்
காதல் முழுங்கி கனத்தும் போனோம்
வேதனை வெம்மைகள் வெளிக் காட்டாமல்..


வெற்றுப் பார்வையில் வெந்தழியச் செய்தாய் 
கடைக்கண் தைத்த என்னிதயத்தை 
தென்றலைப் புறந்தள்ளும் கடைசிக் கையசைப்பில் 
அருவி பெருகியது  அணை போட்ட கண்களில்..


உன்  முத்தங்கள் சிந்திய என்னுதட்டுப் பிரதேசம் 
வெடிப்புகளோடிய  வெற்றுநிலமானது 
தோய்ந்த உன் நினைவுகளில் வருத்தங்கள் வடித்தெடுத்து 
நிரம்புகிறது இக்கணக்கோப்பை..


வார்த்தைகளற்று நீளும் மன வலியில்
மௌனங்களேற்றிக் கண்ணீர் சிந்தட்டும் 
உனக்கான இக்கடைசிக் கவிதையும்!   
                                                                            

செவ்வாய், 7 டிசம்பர், 2010

வெயில்

வட்டமாய் சுற்றி நின்று
குவிலென்சை குவித்து
காகிதம் எரிக்கும்  நேரம்
சோதனைச் சாகசம் பற்களில்..

செய்து வைத்த களிமண் வண்டியும்
ஈரம் சேர்ந்த சட்டையும்
காய்ந்து போயிருக்கும் சட்டென..

ஓட்டடுக்கின் இடையில் நுழைந்து
வெண்புள்ளிக் கோலம் போடும்
தாழ்வாரக் கடையில்..

தலை துண்டோடு வாடிவரும்
வண்டிக் காரனுக்குத் தரும்
வடித்த கஞ்சியிலும் வண்ணம் தெறிக்கும்..

பனைநுங்கும் தென்னை விசிறியுமாய்
புழக்கடை போகும்
சட்டையில்லா அம்மத்தாக் கிழவி..

மதியக் கண்ணுறக்கம் மறந்த
வாசல் விளையாட்டில் ஒரு
நண்பனாய் சேரும் வெயில்..

அந்நிய தேசத்தில் ஏசிக் குளிரில்
ஜன்னல் காட்சியின் நினைவில்
வெயிலேறி விளையாடும் வீடு...


                                                          

வியாழன், 2 டிசம்பர், 2010

மயக்கும் குரல்கள் - தொடர் பதிவு

இத்தொடர் பதிவிற்கு என்னை அழைத்த அன்பு நண்பர் பாலாவிற்கு என் நன்றிகள்.

பெண்கள், பெண்களின் மனதை வெளிப் படுத்தும் பாடல்கள் எண்ணிலடங்கா.. சில பாடல்கள் பெண்குரலில் இன்னும் மெருகேறும் என்பது என் கருத்தும். அவைகளில்  எதனை கோர்க்க எதனை விட?!   
சில பாடல்கள் சில மனநிலைகளில் கேட்கும்போது இதம் தரும். சில பாடல்கள் கேட்கும் போதோ  சில மனநிலைகளையே உருவாக்கும் வலிமை படைத்தவை. அவ்வாறான பாடல்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன். உங்களுக்கும் பிடிக்குமென :)

என் இந்தத்  தொகுப்பில் வரவேண்டிய சிறந்த பாடல்கள் பலவற்றை  ஏற்கனவே நம் பதிவுலக நண்பர்கள் தொகுத்திருக்கிறார்கள். அதனால் அது தவிர்த்து சில!

ஒரு தெய்வம் தந்த பூவே - கன்னத்தில் முத்தமிட்டால்


எனக்கு எப்போதும் விருப்பமான "குரல் தேவதை"  சின்மயியின் இதமான குரலில் வைரமுத்துவின் வைர வரிகளில் ரகுமானின் பூந்தென்றல் இசையில் காதின் வழி சென்று மனதின் ஒவ்வொரு அறைகளிலும் நிரம்பும் பாடல். முன்பே சொன்னது போல் எப்போது கேட்டாலும் உயிரூடுருவும் நிலையைத் தரும் பாடல். கடைசியில் வரும் பல்லவியில் உரு(க்)கி இருப்பார் சின்மயி. எனது மிக விருப்பப் பாடல் எப்போதும்!

பேசுகிறேன் பேசுகிறேன் - சத்தம் போடாதே

கொஞ்சும் குரல் கொண்ட நேஹா பாடியது. இள மாலை வேளை, மிதமான வெயில், மொட்டை மாடி, நீல ஆகாயம், தேநீர், வருடும் தென்றல், இப்பாடல்!

கண்ட நாள் முதலாய் - கண்ட நாள் முதல் 

இது முருகனை நினைத்துப் பாடிய ஒரு பக்திப் பாடலானாலும், கேட்கும் போது மெல்லிய துள்ளல் தொடரும். சுபிக்ஷா மற்றும் பூஜா எனும் இருவர் பாடியது. யுவன் ஷங்கர் ராஜா சேர்த்திருக்கும் புல்லாங்குழல்  இசையும், இரண்டாவது சரணத்தில் வரும் சாக்ஸ போனும் துள்ளலை கூட்டும். 

காற்றின் மொழி - மொழி

சுஜாதாவின் இனிய குரலில், வித்யா சாகரின் இசையில் மிக மெல்லிய மென்னிசைப் பாடல். இந்தப் பாடல் கேட்டு முடித்தபின் பார்ப்பது எல்லாம் அழகாய்த் தோன்றும் :)

மலர்களே மலர்களே - புதுக்கோட்டையிலிருந்து சரவணன் 

வசீகர குரலுடைய பாம்பே ஜெயஸ்ரீன் தேனினிமைப் பாடல். பின்னிரவில், தூக்கம் துரத்தும் நேரத்தில், கண்மூடி,  ஹெட் போனில் இப்பாடலைக் கேட்டுப் பாருங்கள். கண்டிப்பாய் அடிமையாகி விடுவீர்கள் அவர் குரலுக்கும் இப்பாடலுக்கும் ;)

போறாளே பொன்னுத்தாயி - கருத்தம்மா 

தனிச் சிறப்பான சொர்ணலதாவின் குரலில் ஒரு சோகப் பாடல். அபலையின் வாழ்வை மிகச் சிறப்பாய் தன் குரல் வழி பிரதிபலித்திருப்பார். தேசிய விருது பெற்றுத் தந்தது  இப்பாடல்.

நான் முத்தம் தின்பவள் - குரு 

இப்படியெல்லாம் கூட சின்மயியால் பாட முடியுமாவென வியந்து போன பாடல். மிக வேகமாகவும் குரலில் சிறு பிசிறு கூட வராமல் ஆவர்த்தனம் நடத்தியிருப்பார் அந்தக் குரல் தேவதை. இப்பாடல் கேட்டவுடன் நமக்கே மூச்சு வாங்கும்.

செந்தூரப் பூவே - பதினாறு வயதினிலே 

குரல் அரசி ஜானகியம்மாவின் பல பாடல்கள் இவ்வரிசையில் தொகுக்க வேண்டும். அதுவே பல பதிவுகள் வருமாகையால் அவற்றிலிருந்து மிகப் பிடித்த மயக்கும் பாடல் ஒன்று.

தேவதை வம்சம் நீயோ - சிநேகிதியே 

சின்னக் குயில் சித்ராவும், சுஜாதாவும் இணைந்து பாடிய துள்ளலிசைப் பாடல்.
இரு பெண்களின் நட்பின் வடிவம் பாட்டில்.

தாலாட்டும் பூங்காற்று - கோபுர வாசலிலே 

ஜானகியம்மாவின் மற்றொரு பாடல். சரணத்தில் வரும் புல்லங்குழல் இசையும் அதையொத்த ஜானகியம்மாவின் குரலும் அற்புதம்.

மயில் போல பொண்ணு ஒன்னு / இது சங்கீதத் திருநாளோ  - பாரதி / காதலுக்கு மரியாதை  
மயில் தோகை கொண்டு வருடியது போலிருக்கும் பவதாரிணியின் குரல். இன்னும் அவரது குரலில் சில பாட்டுக்கள் இருந்தாலும் இவையிரண்டும் மிகச் சிறப்பு.

இது போல இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். உங்களின்  நலம் கருதி இப்பொழுது இதை முடித்து, பிறிதொரு சந்தர்ப்பத்தில் இன்னும் சொல்கிறேன்.