செவ்வாய், 30 நவம்பர், 2010

சிதறல்கள் 2

நீ கேட்ட கணத்தில் வரமறுத்த
கவிதைக்கீடாய் இதமணைத்து
தடம்பதித்தேன் இதழ்களில்..
பலநூறு கவிதையென்றாய்..
சேருமிடத்தில் தான்
சிறப்பாகிப் போகிறதெதுவுமென
மீண்டும் மெய்ப்பிக்கிறாய்..
இதழ் சேர்ந்ததால் தானே
முத்தமும் கவிதையென்றானது ..
கடல்மேல் பெய்துபோன
மழைக்கென்ன பெயர் தோழி?

*******************************************************************

தேடித் தேடிக் கோர்த்தும்
எழுத்துச் சரம் தான் மிஞ்சுகிறது
இதழ்முத்தம் சிந்தி போ
கவிதைச் செடியின்
முதல் வார்த்தைப் பூக்கட்டும்..

*****************************************************************

முகத்திலடிக்கும் காற்றும்
குளிர்ந்து போனது
உன் முத்தத்தின்
ஈரத்தை கவர்ந்து கொண்டு....

*****************************************************************

வண்டி நிறுத்தி
வாகாய் நடந்து
வாசல் திறக்கிறாய் நீ!
முண்டியடித்து
முதலாய் நுழைகிறது
உன் ப்ரியம்..

***********************************************************************

                  

வெள்ளி, 26 நவம்பர், 2010

ரஜினியும் நானும் பின்ன கொஞ்சம் கற்பனையும்

அன்பு நண்பர் சதீஷ் என்னை இத்தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார், முதலில் அவருக்கு நன்றி!
ஏற்கனவே தீவிர ரஜினி ரசிகர்கள், கமல் ரசிகர்கள், அஜித்தின் அன்புத் தம்பிகள் அவர்களின் பார்வையில் ரஜினியின் "டாப் டென்" படங்கள் தொகுத்திருந்தார்கள்.
ஒரு சாதாரண சினிமா ரசிகனாய், உலகப் படங்கள் பார்த்திராத ஒரு சராசரி பிரஜையாய், கொஞ்சம் கற்பனையுடன் இப்பதிவை எழுதுகிறேன்.





ரஜினி : ஒற்றைச் சொல்லில் ஒளிந்திருக்கும் ஒரு சாம்ராஜ்யம்! பல்வேறு விமர்சனங்கள் வரிசை கட்டி வந்தாலும், புகழின் சூரியன் தலைமேல் எப்போதும் ஒளிர்ந்தாலும் எளிமையாய் தன்னைத் தேடிக் கண்டடைய துடிக்கும் ஒரு சாதாரணன். இயக்குனர்களின் நடிகன். இதற்கு மேல் அவரைப் பற்றிச் சொன்னால் அடிக்க வருவீர்கள் ஸோ.. கவுண்டவுன் ஸ்டார்ட்.
கொடுக்கப் பட்டிருக்கும் வரிசை எண் ஒரு வரிசைக்காகவே அன்றி தரத்தை, சிறப்பை அளவிடும் பொருட்டு அல்ல எனக் கொள்க!

10. தில்லு முல்லு - தி எவர் கிரீன் காமெடி 

இரண்டு ரஜினி, இரண்டும் ஒரே ரஜினி என ஆள் மாறாட்டக் கதையில், நகைச்சுவையில் அடித்துத் துவைத்திருப்பார் ரஜினி. தேங்காய் சீனிவாசனைப் புல்லரிக்க வைக்கும் காட்சி ஒரு சின்ன சாம்பிள் மட்டுமே. ஏற்கனவே ரஜினியுன் சேர்ந்து நடித்திருந்தாலும், ரஜினியின் மீதுள்ள நட்பினாலும், பாலச்சந்தரின் மீதுள்ள மரியாதையாலும், ஒரு சிறு வேடத்தில் கிளைமாக்சில் தோன்றுவார் கமல்!

9. ராகவேந்திரா - தி ஸ்பிரிட்சுவல் மேன்

ராகவேந்திரரின் தீவிர பக்தரான ரஜினி அவரின் கதையில் மிகச் சிறப்பாய் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அமைதியான, ஸ்டைல் இல்லாத ரஜினியையும் மக்கள் ரசித்தார்கள்.




8. பாட்ஷா - தி ஒன் மென் ஷோ!

நிறைய ரஜினி ரசிகர்களுக்கு மிகப் பிடித்த படம். பஞ்ச் வசனங்களால் ரசிகனை கட்டிப் போட்ட படம். தங்கைக்காக மருத்துவக் கல்லூரியில் பேசும் ஸ்டைலும், வாயில் ரத்தம் ஒழுக அடிவாங்கியபின் சிரிக்கும் ரஜினியின் முகமும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.

7. படையப்பா - தி லயன் 

பாட்ஷாவை எப்படி மார்க் ஆண்டனி  இல்லாமல் டிபைன் பண்ண முடியாதோ அதே போல் படையப்பாவிற்கு ஒரு நீலாம்பரி! தனக்கு இணையான ஒரு கதாபத்திரத்திற்கு ரம்யா கிருஷ்ணனை செலக்ட் செய்ததே ரஜினி தான். மிக வேகமான திரைக்கதை மற்றொரு சிறப்பு!



6. சிவாஜி - தி பாஸ் 

ஒரு ரூபாயில் இழந்த சொத்துக்கள் மீட்கும் சுவாரசியமும், ஷங்கரின் திரைக்கதை உத்தியும், பிரம்மாண்டமும், மொட்டத்தலை ரஜினியும் பெரிய பிளஸ்.



5. எந்திரன் - தி ரோபோ 

சிவாஜி தி பாஸ் என்றால் எந்திரன் தி மாஸ், பல விமர்சனங்கள் இருந்த போதிலும் ஒட்டு மொத்தமாக ஒரு நல்ல பொழுது போக்கு படமாக அமைந்தது இது. வில்லன் ரஜினியும் பலநூறு ரஜினியின் சண்டை காட்சிகளும் ரசிகனுக்கு பெரிய விருந்து! இந்தப் படத்தின் வெற்றி ரஜினியை இந்தியாவின் ஐகானாக மாற்றியது.



4. ஹரா - தி வாரியர் 

சுல்தான் என்று பெயர் வைக்கப் பட்டு பின் ஹரா என மாற்றம் செய்யப் பட்ட இந்தியாவின் முதல் அனிமேசன் படம் என்ற பெருமை பெற்றது. அனிமேசன் ரஜினியும் நிஜ ரஜினியும் சந்தித்துக் கொள்ளும் காட்சியில்  ரசிகர்களின் ஆராவாரம் அரங்கத்தையே அசைத்துப் பார்த்தது.



3. எந்திரன் 3 - தி ஹியூமன் மெசின் 

எந்திரன் -1 மற்றும் எந்திரன் -2 வெற்றியைத் தொடர்ந்து மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப் பட்ட எந்திரன் - 3 முந்தைய படங்களின் வசூலை வெளியிட்ட முதல் மூன்று நாட்களிலேயே பெற்று பெரிய சாதனை படைத்தது. ரஜினியின் ஸ்டைலை முப்பரிமாணத்தில் ( 3D ) பார்த்தது பேருவகை!



2. ரஜினி - தி சூப்பர் ஸ்டார் 

ரஜினியின் சொந்த வாழ்கையை அடிப்படையாகக் கொண்ட இக்கதையில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். நடித்திருந்தார் என்பதை விட வாழ்ந்திருந்தார் என்பதே மிகப் பொருத்தம்.
எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்த ஒரு படமாகத் திகழ்ந்தது இது. ரஜினியை எப்போதும் விமர்சிக்கும் பல விமர்சகர்களும் இப்படத்தை பாராட்டியது உண்மை!





1. சிவன் - தி டெஸ்ட்ராயர் 


ஆரம்ப காலங்களில் ரஜினியும் கமலும் சேர்ந்து நடித்திருந்தாலும் அவரவர் பாதைகள் தேர்ந்தெடுத்துக் கொண்டபின், நீண்ட வருடங்கள் திரையில் சேந்து நடிக்கவே இல்லை.
அந்தக் குறையை இப்படம் போக்கியது எனலாம். ஒரு வரலாற்று உண்மையை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தால் ஒன்று சேர்ந்த இருவரும் நட்பின் இலக்கணமாய்   இருந்தனர். பல விருதுகள் குவித்த இப்படம் தமிழ்த்திரைப்பட வரலாற்றில் ஒரு அடையாளமாக கருதப்படுகிறது.



டிஸ்கி : ரஜினியின் ஒவ்வொரு படமும் அவரின் மற்ற படத்திற்கு எந்தவிதத்திலும் குறைவில்லாதது தான். இங்கு குறிப்பிட்ட கடைசி மூன்று படங்கள் கற்பனை தான் எனினும் அது உண்மையானால் நான் குறிப்பிட்டது போல ரசிகர்களுக்கு பெரிய விருந்து என்பது மறுக்கமுடியாதது தானே?!
இப்பதிவை நான் தொடர் அழைப்பது
ஆர்விஎஸ் அண்ணன் மற்றும் நண்பர் அப்துல் காதர்

படங்கள் தந்துதவிய கூகிளாண்டவருக்கு நன்றி!

                                                                                                                                                          

வியாழன், 25 நவம்பர், 2010

தலைப்பிடாதது இரண்டு

பழைய நண்பனை
எதிரில் பார்த்து
நலம் நோக்கி
விசாரித்தறிந்து
கடந்த நிகழ்வுகளை
நிகழுக்கிழுத்து
நடந்தபடி பேசி
மறுப்பின் பயனுதவாமல்
டாஸ்மாக் நுழைந்து
நினைவைக் கிளறிக் கொண்டே
முதல்மிடறு உள்ளிறக்க
இறங்கியோடுகிறது
மனைவியிடம் செய்த
சத்தியமொன்று...

*************************************************************************



கடைசிவாய் உணவின்போது
வாசல் வந்துவிட்ட ஒருவனை
முழுங்கவும் முடியாது பேசவும் முடியாது
தலையசைப்பால் திருப்பியனுப்பி
தாழிட்டுத் திரும்ப
மென்ற சோறு உள்ளிறங்காதபடி
ஏதோவொன்று முட்டிநின்றது.



திங்கள், 22 நவம்பர், 2010

சில பயணங்கள்!

உடைக்கும் தேவைகளற்று
நீளும் மௌன நிமிடங்கள்
தொடரும் சில பயணங்கள்..

வலிய இழுத்துப் பேசும்
உரையாடலின் முற்றுப் புள்ளியை
அவசரமாய் வைக்கத் துடிக்கிறேன்
வார்த்தைகள் எகிறத் துடிக்கும் கணத்தில்...

நேற்றைய தூக்கம் முழுதுமிருந்தும்
இமை மூடாமல், ஜன்னல் காட்சியின்
சிறுபிள்ளை  ஏக்கத்தால்...

சட்டென கவிந்து மேகம் தூவும்
சிறு சாரலும், தூரக் குழந்தைகளின்
விளையாடர்க் காட்சியும்
சோகப் பக்கங்கள் தாண்டிடும்
நினைவுப் புத்தகத்தில்...

சிநேகப் புன்னகையையும்
நாளிதழ் நீட்டலையும் வலிய மறுத்தும்
முகம் நோக்கும் எதிரிருக்கை பயணி..
மனிதர்களுடன் பயணித்தும்
பேசவிழையா பயணங்கள் சில..

இலக்கில்லா பயணங்களில்
துணையாகிப் போகிறது
நீள் மௌனமும்
நிமிடங்கள் தின்னும்
உன் நினைவும்...

                                    

வியாழன், 18 நவம்பர், 2010

ஜம்பம்

வெடுக்கென பேப்பர் பிடுங்கும் வெறுப்பும்
பின் கைதிணிக்கும் சாமான் கூடையும்
வரும் பசி தீர்க்கவெனக் கொண்டேன்..

பாத்திரம் கழுவும் நேரத்திலே
பக்குவமாய் பால்கோவா செய்யவும்
பாடம் எடுக்கிறாய் நீ..

நான் துவைக்க கிழியும் ஆடை
கிழியாமல் கறை நீக்கும் கலையை
யாரிடம் கற்றாய்...

பட்டமும் பின் தொடரும் நிர்வாகமும்
பதறுகிறது குழந்தை சமாளிக்கும்
உபாயம் அறியாமல்..

சட்டையில்லாமல் செய்த சமையலின்
வினையை வன்மமாய் உணர்த்தியது
வெடித்த கடுகு...

குனிந்து பெருக்கும்  போது
இடிக்கும் தொப்பை ஆறுமாத
உடற்பயிற்சி  நிறுத்தமெனக் கொள்!

ஒத்துக் கொண்டு சண்டை முடிக்கிறேன்
கோபத்தில் வீசியெறியும் பொருட்களிலும்
பட்டுத் தெறிக்கிறது உன் அன்பென..





டிஸ்கி : இது தங்கமணிகளின் சொல்பேச்சு கேளாமல்  பரேடு வாங்கும் அப்பாவி ரங்கமணிகளுக்கு அன்புடன்  சமர்ப்பணம். :)

பின் குறிப்பு : இது உன் "சொந்த சோகக் கதை"யா வென பின்னூட்டமிட நினைக்கும் அன்பு உள்ளங்களுக்கு, எனக்கு இன்னும் திருமணமாகவில்லை என நினைவு படுத்த விரும்புகிறேன் ;)


    

புதன், 10 நவம்பர், 2010

நான்!

கல்லிடறிக் கன்னத்தில்
காயம்பெற விழுந்து
காத்திருக்கும் கல்லூரிக்
கன்னிகளின் பெரும்சிரிப்பில்
அவசரமாய் எழுபவனோ..

இரவுப் பணி முடிந்து
கலைந்த தலையும் கண்சொருகும்
தூக்கமுமாய், அதட்டும் குரலில்
பெண்கள் இருக்கை விட்டு எழுபவனோ..

தவறுதலாய் கால்மிதிக்க
ஏச்சுப் பேச்சுக்களால் பிடரிக்
கண்ணுள்ள பெரும்பிராணியாய்
மாறிப் போகிறவனோ..

உயிரொடுக்கி மொழி மறந்து
ஊர் சேர, விரல் நடுங்கி
கண்பார்த்து யாசிப்பவனோ..

அடிக்கும் வெயிலிலும்
அரைகிளாஸ் டீயில்
அரைநாள் பட்டினி
துரத்துகிறவனோ...

வளைந்த மூக்கும் வடிவிலா தேகமும்
கொண்ட என்னை நோக்கி
முகம் சுளித்து இரண்டடித் தள்ளிப் போகையில்
கவனமாய்ப் பாருங்கள்
எனக்குள்ளும் உயிர்த் துடிப்பதை...

திங்கள், 8 நவம்பர், 2010

காதல் பெருமழை!

உனக்காக காத்திருந்த வேளைகளில்
நங்கூரமிட்டிருந்த என் நிமிடக் கப்பல்
உன் வருகையின் கணத்தில்
ஓடத் தொடங்கியிருந்தது உலகம் சுற்றிவர..

இதழ் சுழித்து பார்வை பேசும்
நேரத்தில் கவிந்திருந்த
கோபமும் காணாமல் போனது
வேகக் காற்றில் வெற்றுத் தாளென...

தயக்கங்களால் நிரம்பியிருந்த
நம்மிடைவெளி விரல் ஸ்பரிசங்கள்
தட்டி கவிழ்ந்தோடுகிறது
நம்மை நனைத்தபடி..

சுற்றும் பேச்சுக்கள் யாவிலும்
"நாம்" முன்னிலை, "நீ"  "நான்" படர்க்கை..
ஆடை நுழைந்து தேகம் தீண்டி நழுவும் காற்றில்
நம் காதல் வாசனை..


சிந்தும் இதழ் முத்தங்களால் 
மெல்லத் தொடங்கியிருந்தது 
காதல் பெருமழையொன்று..