வெள்ளி, 29 அக்டோபர், 2010

கொடுங்கனவு!


சிரிப்பொலிகள் சதங்கையாடும் 
பூட்டிய வீடுகளின்
அமானுஷ்ய அதிர்வின்
அலைகள் துரத்தும்
பற்றியெரியுமென்
நிர்வாண தேகத்தின்
மயிர் கால்களிலிருந்து
வழியும் பிசுபிசுப்பான
திரவத் துளிகள் 
வழியெங்கும் பெருகியோட
கைகளுக்ககப் படா காற்றின்
கால்கொண்டு விரைந்தோடி
திரும்பவியலா திருப்பத்தில் 
உச்சி மலையின்
குச்சிக் கிளையினின்று
குதிக்கும் கணத்தில்
சுழற்றும் காற்றின்
பேரலறலில் வீரிட்டு விழிக்க
என் தேகம் நனைந்திருந்தது!


               

திங்கள், 25 அக்டோபர், 2010

ஊடல் பொழுதுகள்

தீண்டும் இன்பத்தில் திளைத்திருந்த 
என் விரல் தூரிகை 
உன் தேக வண்ணமில்லாமல் 
வறண்டிருக்கிறது இப்போது..


வளைகொலுசின்  செல்லச் 
சிணுங்கல்கள் கேளாமல் 
வாடிப் போயிருக்கிறோம் 
நானும் நம் காதற் பொழுதும்..விரும்பிவரும் நேரத்தில் 
விலகிப் போகிறாய் நீ 
கூடற்சரத்தின்  இன்றைய 
முத்து நழுவி விழுகிறது..


உன் இதழ் விரித்துச்  சிரிக்காமல்  
தலை சூடிக்கொள்கிறாய் பூவை
மலரிதழ் விரிக்காமல் 
மொட்டாகவே இருக்கிறது இன்னும்..


தயக்கங்கள் தட்டிவிட்ட 
இடைவெளியின் இருள் நேரத்தில் 
நமை சேர்க்க நாடி வந்து 
காத்திருக்கிறது நட்புத் தென்றல்.. 


கோபிப்பாயெனினும்
மன்னிப்பின் வார்த்தைகள் 
வரிசைப் படுத்துகிறேன் 
ஊடலின் ஜன்னலாவது திற..


  

புதன், 20 அக்டோபர், 2010

என்னைக் கொஞ்சம் கவனி!

தோட்டத்துச் செடிகளுக்கெல்லாம்
நீரூற்றும் போது சற்று விரல் தெளித்துப்போ
என் காதல் விதைக்கும்...

தெருநாய் பெறும் உன் வாஞ்சையின்
ஓரத்தையாவது பிய்த்துக்கொடு எனக்கு
வாழும் நாளெல்லாம் சுற்றி வருவேன் உன்னை...

கைக்குட்டையை உதறிச்செல் ஒருதரம்
உன் முத்தங்கள் சேர்ந்த  காற்றை
சிறைபிடித்து சுவாசம் நிறைத்துக் கொள்கிறேன்..

சிறுபுன்னகையாவது இட்டுப் போ இக்கணம்
முட்டி நிற்கும் இக்கவிதையின்
அடுத்தவரி அர்த்தமாகட்டும்...

பானைச் சோறனைத்தும் கேட்கவில்லை
பருக்கையாகவாவது சிந்திவிட்டுப்போ
உன் ப்ரியங்களை...


 

திங்கள், 18 அக்டோபர், 2010

நீவிர் பெருமனிதர்!

துப்பி வைக்கும் இடங்களிலெல்லாம்
பரப்பி விட்டுச் செல்கிறீர்
வதந்தியின் துர்நாற்றத்தை..

முதுகு வலிக்கும்  கனத்தை
எங்கும் இறக்காமல் கூனிட்டுச் சுமக்கிறீர்
பொறாமையின் பொதிமூட்டையை..

உம் அவமானத் துப்பல்கள்
வழிந்திடும் என் முகத்தை
எப்படிக் கழுவியும் அடங்கவில்லை
விசுவாசத்தின் எரிச்சல்..

எந்தக் கையும் கொட்டுவதில்லை
பொய்யுரைக்கும் கணத்தில்
நீவிர் பெருமனிதர் பாகையணிவதால்..

என்ன முயன்றும் எழுதி
விழுங்க முடியவில்லை; உம்
துரோகச் செருகலின் கசப்பை..

வெள்ளி, 15 அக்டோபர், 2010

தனிமைச் சாலை!

கொடி மின்னலின் வெளிச்சம் குடித்து
சரிந்து படுத்திருக்கும் பேரிருளில்
தனிமைச் சாலையில் நான்..

தடத்தாளத்திற்கு எதிர்ப்பாட்டெனயான
நிசிக்காற்றில் செவிவழி ஊர்ந்து
உயிரூடுருவும் ஊளைக்குரலொன்று..

அவசர மூச்சுக்களால் மயிர்க்காலின் வழி
பாய்ந்திறங்கும் வியர்வை ; பிழியும் உடைகள்
பரவும் புகையில் நாசியேறி சுவாசம் நிறையும்
பிணமெரியும் வாடை..

ஒத்தை மரம் கடக்க, அரவம் அருவுதலில் 
நினைவு சுற்றத் தொடங்கியது  கேட்ட
கதைகளில் ஆவிமையம் பிடித்து..

மனம் நடுங்கும் குளிரிலும் 
துரத்தவியலாமல் கூடவே பயணித்தது,
துணைக்கழைக்கா பயம்..


 

புதன், 13 அக்டோபர், 2010

பெருமழைக் காலம்..

ஊருறங்கிய நேரத்தில்
எழுதிச் சென்ற பெருமழையின்
வரிவடிவங்களாயின
தெருவிலோடும் சிற்றோடைகள்..

நேற்றைய வெண்மேகம்
திட்டுக்களாய் சிதறியிருந்தது
ஓட்டிடுக்கிலும் பூந்தொட்டியிலும்
குடைக்காளான்களாய்...

நிறைந்த ஊருணியில்
கரைந்து கலங்கிக் கிடக்கிறது
விடுமுறைநாளின்
விளையாட்டுமைதானமொன்று...

தொடரும் மின்னல்களும் கருத்தமேகங்களும்
காத்துக் கொண்டிருக்கின்றன
பறவைகளடையும் நேரத்திற்கு
மற்றொரு சமரம்புரிய..

முழுதும் காயா என் சட்டையிலும்
ஒட்டிக்கிடக்கின்றதொன்று
ஊரெங்கும் படிந்து கிடக்கும்
பெருமழையின் தீராவாசம்...திங்கள், 11 அக்டோபர், 2010

சிதறல்கள்!

பரிசுத்தம்..

கண்மூடி உதடுகுவித்து
விரைவாய் கன்னம் சிவந்து
மெலிதாய் முத்தமிட்டாய் என்னை

ஆழ்கடலில் மேலெழுந்த
முத்துச்சிப்பி பெற்ற
வான்மழையின் முதல் துளி போல்.

*********************************************

எத்தனை முறை விரட்டினாலும்
மீண்டும் வந்தமர்கின்றது
என்மனச் சுவரில்
உன் நினைவுப் பறவை..

*********************************************

ப்ரியம்..

உன் ப்ரியத்தின் கைகளால்
நட்ட பதியன்களில்
பூத்துச் செழிக்கிறது
முட்களில்லாத ரோஜாக்கள்...

********************************************

உன்ப்ரியத்தின் வருகை பார்த்ததும்
உயிர் பயத்தில் கொல்லைப்புற
சுவரேறி தப்பிச் செல்கிறது 
என் வெறுப்பின் சாத்தான்...

********************************************


மழை...

துளியாக விழுகிறது
மண்ணில்..
ஏதோ நிறைகிறது
மனதில்..

********************************************

காதல்..

ஒன்றும் ஒன்றும்
ஒன்றெனப்படுவது..


********************************************

இன்று..

நேற்றைய வேலைகளும்
நாளைய கனவுகளும்
சுமக்கும் மற்றொரு நாள்..

*******************************************

எப்போதும் மறுதலிப்பெனும்
ஒருவழிப் பாதையில் செல்லாதே..
உன்னை பற்றிச் சென்ற மனது
திரும்பி வர தடுமாறுதே...

*******************************************
   

வியாழன், 7 அக்டோபர், 2010

வரம்கொடு..

நகர மறுக்க சபிக்கப்பட்ட
மரமாகவேனும் நீ வரும் வழிகளில்
நிற்க மட்டும்  வரம்கொடு
இலையசைத்துப் ப்ரியத்தின்
தென்றலை திருப்பி விடுகிறேன்...

மறுப்பின் மொழிகளாவது
வீசிச்செல் வீதிகளில்
தேடிப்பிடித்து புழுதி துடைத்து
பத்திரப் படுத்திக் கொள்கிறேன்
ஞாபக அலமாரிகளில்...

ஒருமுறையேனும் திரும்பிப் பார்
உனைக்காண தவமிருக்கும் என்
நிமிட வேர்கள் உன் பார்வையீரத்தில்
சிலநாள் பிழைத்துப் போகட்டும்...

யாருக்கும் தெரியாமலேனும்
கொடுத்துவிட்டுப் போ
என்னிடமிருந்து பிடுங்கிய
உன்னைப் பற்றிய கனவொன்றையாவது...டிஸ்கி : இன்று பிறந்தநாள் காணும் எங்கள் பாசமிகு அண்ணன் தேவா அவர்களின் எண்ணம்யாவும் வெற்றியாய் அமைய இறைவனிடம் வேண்டுகிறேன்!


 

செவ்வாய், 5 அக்டோபர், 2010

மன்னாதி மன்னன் - மதுரை திருமலை நாயக்கர்.


அருமை நண்பர் வெறும்பய என்னையும் இந்த தொடர் பதிவுக்கு அழைத்து இருந்தார். அன்னாரின் அன்பை ஏற்று தொடர்கிறேன்.

மதுரையை ஆண்ட மன்னர்கள் ஆயிரமாயிரம் பேர். அம்மை மீனாட்சியின் ஆட்சியையும் சேர்த்து மதுரையை "கடவுளர் ஆண்ட பூமி" எனவும் கூறலாம்.  நான் பிறந்த ஊர் அல்லவா! :)  அவர்களுள் ஒருவரான மன்னர் திருமலை நாயக்கரைப் பற்றிய  தகவல்களை தொகுத்திருக்கிறேன். 
ஏற்கனவே அவரைப் பற்றி நிறைய அறிந்தவர்கள்,  இப்பதிவில் ஏதேனும் தகவல்கள் விடுபட்டிருந்தால் அல்லது தவறிருந்தால்  பின்னூட்டத்தில் பின்னவும் :)

சுமார் 207 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட நாயக்கர் மன்னர்களில் ஏழாவது மன்னராக மதுரையை தலைநகராகக் கொண்டு சிறப்பான முறையில் ஆட்சி நடத்தியவர் மன்னர் திருமலை நாயக்கர். தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்ட நாயக்கர்களின் மதுரை வருகை  இது போன்று இன்னும்  இரண்டு பதிவுகளுக்கு காரணமாகிவிடும் என்பதால் அதை அப்படியே நகர்த்தி வைத்து விட்டு திருமலை நாயக்கரை பற்றி மட்டும் பார்ப்போம்.

கி.பி. 1623 லிருந்து கி.பி.1659 வரை 36 ஆண்டுகள் ஆட்சி புரிந்த திருமலை நாயக்கரின் இயற்பெயர் திருமலை சவுரி நாயனு அய்யுலுகாரு என்பதாகும்.இவர் பிறந்த ஆண்டு கி.பி.1584. தந்தையார் பெயர் முத்துகிருஷ்ணப்ப நாயக்கர். பலதிறன்களும் அரசியல் விற்பன்னமும் திருமலை நாயக்கரின்  சிறப்பு.

திருமலை நாயக்கரின்  அண்ணன் முத்துவீர நாயக்கருக்குப் பின் அரியணை ஏறிய அவர் முதலில் திரிசிரபுரம் என்னும் இன்றைய திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சிசெய்து கொண்டிருந்தார். இளம்பருவத்தில் தொற்றியிருந்த "மார்ச்சளி" நோயினால் உடல்வலிமை குன்றியிருந்தார். காவிரிச் சூழலிலிருந்து மாறி மீனாட்சி சொக்க நாதருக்கு முறையான வழிபாடுகள் செய்யவும், மதுரையை தலைநகராகக் கொண்டால் அந்நோயிலிருந்து விடுபடலாமென மருத்துவன் ஒருவன் கூறிய அறிவுரைஏற்று மதுரையை தன் தலைநகராகக் கொள்கிறார் மன்னர். மருத்துவன் வடிவில் சோமசுந்தரக் கடவுளே வந்ததாகச் செவிவழிச் செய்திகள் உலவுகின்றன.


திருமலை நாயக்கரின் ஆட்சியில் பண்டைய பாண்டிய நாட்டின் பெரும்பகுதியும் திருவிதாங்கூரின் சிலபகுதிகளும் அடங்கியிருந்தது. டெல்லியிலிருந்து சுல்தானின் அச்சுறுத்தல்கள், மைசூரின் மன்னர்களின் படையெடுப்புகள்  இருந்தபோதும் நிலையான போரில்லாத, நீண்ட அமைதியான அரசை மக்களுக்கு அளித்தார். அவரின் ஆட்சியில் செல்வம் செழிக்க ஆரம்பித்தது. பெருகியசெல்வங்களை பல கோவில் திருப்பணிகளுக்கு செலவிட்டார். சைவ - வைணவ ஆலயங்களுக்கு சீரான திருப்பணிகளும் முறையான வழிபாடுகளும் தொடர்ந்திருந்ததைச் சான்றாகச் சொல்லலாம். ஒரு சைவக் கோவிலுக்கு அருகே ஒரு வைணவக் கோவிலையும் அதே சிறப்புடன் பராமரித்து வந்திருக்கிறார். ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள மடவார் வளாகத்தில் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது. அக்கோவிலில் உள்ள பெரிய நாடக சாலை மண்டபம் அவரால் கட்டப்பட்டது தான்.


அதே நேரத்தில் கிருத்துவ மற்றும் முஸ்லிம் அமைப்புக்களையும் ஆதரித்திருந்திருக்கிறார். அவருடைய ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதிகளை பாளையப்பட்டுக்களாக  பிரித்து அங்கு பாளையக்காரர்களை ஆட்சியதிகாரத்தில் அமர்த்தினார் நாயக்கர். மொத்தம் 76 பாளையப்பட்டுக்கள் சேர்ந்து திருமலை பேரரசாக திகழ்ந்திருந்தது. அவை இன்றைய  தேனி, நெல்லை,மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் இடங்களில் இருந்திருந்தது. பின்னாளில் வீர பாண்டிய கட்டபொம்மனும், மருது பாண்டிய சகோதரர்களும் இன்ன பிற சிற்றரசர்களும் இப்பாளையக்காரர்களின் வழித்தோன்றலே என்பது செய்தி. 

கோவில் சீர்திருத்தத்தில் அவர் காட்டிய அக்கறை அவரது திறன்களை தெளிவாக்குகிறது. மீனாட்சியம்மன் திருவிழாவை சித்திரை மாதத்திற்கு மாற்றியது, அத்திருவிழவை வெகுசிறப்பாக நடத்தி சைவ - வைணவர்களை ஒன்றென இணைத்தது, வசந்தமண்டபம் கட்டியது, மீனாட்சியம்மன் கோவிலை மிகச் சிறப்பாக எடுத்துக் கட்டியது, தெப்பத் திருவிழாவை உருவாக்கியது என அவர் செய்த சாதனைகள் பல. திருமலை நாயக்கரின் காலத்திற்கு முன்பு வரை மீனாட்சியம்மன் திருவிழா சைவர்கள் மட்டுமே கொண்டாடும் விழாவாக இருந்தது என்பதை இவ்வுடன் நினைவுகூர விழைகிறேன். 

மீனாட்சியம்மன் கோவிலிலுள்ள முக்குருணி விநாயகரின் பெரிய சிலை கோவில் விரிவாக்கத்திற்காக மண்ணெடுக்கும் போது கண்டெடுக்கப்பட்டு, அது கோவிலிலேயே நிறுவப்பட்டிருக்கிறது. மண்ணெடுக்கத் தோண்டிய இடம் இன்றைய மாரியம்மன் தெப்பக்குளமாக சாட்சியென இருக்கிறது.  

இன்றைய மதுரை, திருமலை நாயக்கரின் ஆக்கம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.மதுரையின் தெருக்கள், ஆலயங்கள், அவரது ஆட்சியிலிருந்த ஊர்களிலுள்ள ஏரிகள் எல்லாம் அவரது ஆக்கங்களே. இன்றோ அவ்வேரிகளில் பாதிக்கும் மேல் தூர்வாராமல் குடியிருப்புக்களாக மாறிவிட்டிருக்கின்றன.

அவரது ஆட்சியில் மற்றொரு சிறப்பு மிக்க ஆக்கம் அவரது மாளிகை. திருமலை நாயக்கர் மஹால் என்று இன்றும் பொலிவுடன் விளங்கும் அவரது அரண்மனை கட்டிய பொழுதில் இருந்ததில் நான்கில் ஒரு பகுதியே மிச்சமிருக்கிறது. தற்போது தமிழ் திரைப்படங்களின் சூட்டிங் ஸ்பாடுகளில் ஒன்றென மாறியிருந்தது காலத்தின் கோலம் :(  

எழில் வாய்ந்த இந்த அரண்மனை கி.பி.1639 ஆண்டு இந்தோ- சாரசீனிக் முறைப்படி ஒரு இத்தாலிய பொறியியல் வல்லுனரால் கட்டப்பட்டது. சாரசீனிக் முறை என்பது முஸ்லிம் கட்டடக்கலையாகும்.இதில் சொர்க்க விலாசம் மற்றும் ரங்க விலாசம் என இரண்டு பகுதிகள் இருந்திருக்கின்றன. முன்னதில் திருமலை நாயக்கரும் பின்னதில் அவரது தம்பியும் அவர்களின் வாழ்நாள்வரை இருந்திருக்கிறார்கள். இது தவிர 18 இசைக்கருவிகள் இசைக்கும் இடம், படைகலன் வைக்கும் இடம், பூஜை செய்யும் இடம், அரியணை மண்டபம், தேவியரின் அந்தப்புரம், நாடக சாலை, மலர் வனங்கள், பணியாளர் வசிக்குமிடம் என பல இடங்கள் வடிவமைக்கப் பட்டிருந்தன.


சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு... 


இந்த அரண்மனையிலிருந்து மீனாட்சியம்மன் கோவிலுக்கு சுரங்கப் பாதையொன்று இருந்தது எனவும் காலப்போக்கில் அது அழிந்து விட்டது எனவும் கூறுவர். இன்றும் மீனாட்சியம்மன் கோவிலிலுள்ள பைரவர்  சன்னதிக்கு எதிரேயுள்ள சிறுகிணறு சுரங்கப்பாதையின் வழியென கூறுகின்றனர். 

சீரும் சிறப்புமாக மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் தனது 75  வது வயதில் உயிர்நீத்தார்.உப செய்தியாக,  வீரப் பெண்மணி ராணி மங்கம்மா திருமலை நாயக்கரின் வழித்தோன்றலே! தமிழகத்தையாண்ட பெரும்புகழ் படைத்த மன்னர்களான கரிகால்சோழன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், நரசிம்மபல்லவன், ராஜராஜசோழன், ராஜேந்திரசோழன் இவர்களின் வரிசையில் மன்னர் திருமலை நாயக்கருக்கும் இடமுண்டு என்பது மறுக்க முடியாத வரலாறு.

மீனாட்சியம்மன் கோவிலுக்கோ அல்லது மதுரைக்கோ நீங்கள் செல்லும் பொழுது செம்மையாக ஆண்ட  திருமலை நாயக்கரின் நினைவு ஓரிரு நொடிகள் வந்தாலே இப்பதிவின் நோக்கம் முற்றுப்பெறும்.

இப்பதிவிற்கு உதவிய தளங்களுக்கு நன்றி!    

வெள்ளி, 1 அக்டோபர், 2010

உருமாற்றம்...

மிக மிருதுவான கைகள் உன்னுடையது
பட்டின் ஸ்பரிசமும் பனிக்காற்றின்
குளுமையும் கொண்டதது...

பிறந்த சிசுவின் பூம்பாத நிறமும்
மல்லிகை மணமும் நிறைந்ததது

மேகத்தினூடே மின்னலென
ரேகைகள் ஓடும் வெளியது...

வீசிநடக்கும்போது விரல்கள்
செய்யும் நடனத்தின் பாவம்...

செதுக்கப் பட்ட நகங்களும்
நடுவிரல் நுனிமச்சமும்
அழகு சேர்த்தது அதற்கு..

கைதவறியுடைந்த பூந்தொட்டிக்காய்
விரல்பதிந்த குழந்தையின்
கன்னம் பார்த்தபின்

கோபச் சாத்தானின்
சவுக்காகிப் போயிருந்தது
உனதிந்த கைகள்..