செவ்வாய், 28 செப்டம்பர், 2010

நிகழாத் தூக்கம்..

வலிய இழுத்துப் பிடித்த உறக்கமொன்று
பாதிக் கனவில் கரைந்து  போனது
திறக்கவியலா  கண்ணெரிச்சலும்
கடக்கவியலாத் தொலைவொன்றுமாய்...

வெளியேறும் தணல் மூச்சுக்களில்
மெல்லப் புகையத் தொடங்கியிருந்தது
தூக்கம் சிறை வைக்கத் தெரியா
தலையணையும் வெண்பஞ்சு மெத்தையும்...

அறைதப்பிப் போன தூக்கம்
துரத்திப் பிடிக்கவியலாமல்
சுற்றிக் கொண்டிருந்தது நினைவு
இதயம் கிழித்த வலியொன்றில் ...

எண்திசை நீண்டு காத்திருக்கும் கனவுகள்
தூக்கவாசல் திறப்பிற்காய்
கனவுகளின் காவலனாகிப் போனாலும்
உறக்கத் தாழுடைத்து உள்ளேறும்
வழியேதும் உண்டோ?


 

சனி, 25 செப்டம்பர், 2010

புரிதல்...

வழியில் எதிர்ப்பட்ட
பார்வையற்றவரின் உலகம்
எப்படியிருக்குமென்று அறிய
கண்களை கறுப்புத்துணியால்
கட்டிக்கொண்டு நடக்கிறாய் நீ!

எப்படியும் இன்னும் சில நிமிடங்களில்
கட்டவிழ்ந்துவிடுமென்ற  தைரியத்தில்
சூழும் இருளும் உனக்கு ஒரு
சாகச விளையாட்டாகிறது, அது அவனது
விலக்கமுடியா சிறை என்பதறியாமல்!...
டிஸ்கி : இது பார்வையற்றவரின் மேல் பரிகாசமோ அல்லது பரிதாபமோ என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று வேண்டுகிறேன். சக மனிதனின் வலியை நாம் ( நம்மில் பலர் ) எவ்வாறு மேலோட்டமாக  புரிந்து கொள்கிறோம் என்பதைச் சொல்லுவதாகவே இதை எடுத்துக் கொள்க!

 
 

புதன், 22 செப்டம்பர், 2010

நீ...நான்!

இடைவிடாத தென்றலின் 
அழைப்புக்களுக்கு தலையசைக்காத 
இலைகளென உனைச்  
சுற்றியலையும் என் 
ப்ரியத்தின் கேவல்களுக்கு 
மௌனப் பரிசளிக்கிறாய் நீ!..

பிடித்த விரல் நழுவவிட்டு 
தொலைந்துபோன 
குழந்தையின் தவிப்பென
எனையுதறி உனைச்
சுற்றியலையும் மனத்தால் 
தவித்தலைகிறேன் நான்!..

*******************************************************************************

தோழியருகே இடமில்லாமல் 
என்னருகே நீயமர்ந்து வந்த 
பேருந்துப் பயணத்தில்..
உன்னை முதலாய்ப் 
பார்த்த கணத்திலிருந்து 
நினைவுகள் மீட்டி 
பதற்றமாய் உன்னைச் 
சுற்றிப் பின்னிக்கொண்டிருக்க
எனைக் கவனியாது போல் 
முன்னிருக்கை குழந்தைக்கு 
முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறாய் நீ!..


   

திங்கள், 20 செப்டம்பர், 2010

நட்பின் பகை!


நேற்றிரவு சண்டையிட்டுக் கொண்ட 
நண்பர்கள் அறையில் வேறெதுவும் 
உடைந்து  சிதறியிருக்கவில்லை,
சில கண்ணாடித் துண்டுகளும் 
நட்பின் நம்பிக்கைகளும் தவிர...

தெரு முழித்துக் கொண்டதையும்
பேசித் தீர்க்கவியலாப் பிரச்சனை 
இல்லையெனவும் விலக்கிய
நண்பன் விளக்கினான்..

காலி மதுபுட்டிகளும் 
கவிழ்ந்திருந்த கோப்பைகளும் 
மெலிதாய் சிரித்துக் கொண்டிருந்தன 
நடந்த சண்டைக்கு சாட்சியென...

கைகிழிந்த காயத்தின் வலியும்
புரிதல் செத்த நிமிடங்களும் 
மிஞ்சியிருக்கின்றன
பரஸ்பர மன்னிப்பின் 
வார்த்தைகளை எதிர்நோக்கி!...    


புதன், 15 செப்டம்பர், 2010

கொல்லும் சொல்!கொல்லும் சொல்!


ஒரு சொல்
போதுமானதாயிருக்கிறது
சில தருணங்களில்..
கண்ணீரைப் பீறிட வைக்க
தீராக்கோபம் கொளுத்த
ப்ரியத்தின் அணைப்பை சந்தேகிக்க
அவிழ்க்கமுடியா முடிச்சுகளிட
மனக்காயத்தில் விரல்சுண்டும்
வலியுயர்த்த..
நமக்கிடையேயான
தொடும் இடைவெளியை
பேரண்டத்தின் பெருவெளியாக்க...
சட்டென!


சட்டென நிகழ்ந்துவிடுகிறது சில..
ஓர் அலட்சியப் பார்வை
ஒரு புறக்கணிப்பின் தள்ளல்
ஒரு பிரிதலின் இடைவெளி...
பறந்துகொண்டிருக்கும்
உறவின் மெல்லிய நம்பிக்கை
நூல் அறுபட...

                                            

திங்கள், 13 செப்டம்பர், 2010

என்னைக் கொஞ்சம் விடுவி!

ஒட்டிவைத்திருக்கும்
உன் இதழ்கள் பிரி
மொழிகளோடு சில
முத்தங்கள் சிந்தட்டும்..

மூடியிருக்கும் இமைகள் திற
உன் நினைப்பில் எரியும்
என்னுருவம் தெரியட்டும்..

உன் இடுப்பேற தவித்து
நிற்கும் என் ஏக்கக் குழந்தையை
மறுக்காமல் கொஞ்சம்
தூக்கிக்கொள்
உயிரையெடுக்கும் அதன்
அழுகை அடங்கட்டும்...

மூடிவைத்திருக்கும்
விரல்கள்பிரி சிறைபட்டிருக்கும்
என்னுலகம் நழுவி
கீழே விழட்டும்...

                          

புதன், 8 செப்டம்பர், 2010

திசைமாறிய கனவுகள்!

கலைந்து கிடக்கும் கனவிலெல்லாம்
ஒளிந்து கிடக்கிறது ஏதோவொன்று
நிகழாக் கணத்தின் ஏக்கப் பிம்பமென
மாற்றிக்காட்டும் கடந்த நிகழ்வென...


நனவின் இடைவெளித் தருணம் 
முயன்று தோற்கிறது இணைக்க
முன்கனவின் நிலையில்லா நிலையையும்
பின்கனவின் தொடர்பில்லா தொடர்பையும்...


கனவின் மீதேறிப் பயணித்த புரவியொன்று
திக்குத் தெரியாமல் தவித்தலைகிறது
பெருங்கூட்டின் வெளித்திடலில்
திசைமாறிப் போன கனவுகள் காணாமல்...


விழிக்கும் நிலைவரை தொடர்ந்திருந்தும் 
தொங்கி நிற்கிறது துறட்டிகளில்
தோலுரித்த முண்டங்களென
நேற்றைய கனவுகள்...


                                                                             

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

உன் அன்பு!

இதமென்னும் பூங்குழலில்
இசைத்திடும் இனியகீதம்
நீ சொல்லும் மொழிகள்...

வழியெங்கும் வசந்தத்தின்
வடிவங்கள் வடிக்கிறாய்
வார்த்தைகளின் வழி..

எழில்மிகு வனப்புகளின்
ஏற்ற இறக்கங்கள்
கொளுத்தும் மோகத்திரி...

குளிர்ந்து பொழிந்து
சிலிர்ப்பின் வேர்கள் நனைக்கும்
உன் பார்வைத்துளிகள்..

தனிமை இருள்வெளியில்
வண்ணம் வரையும் உன்
அணைத்தவிரல் தூரிகை...

திக்கற்ற காட்டின் வழிப்பாதையென
வாழ்வில்  எப்போதும்
துணைவரும் உன் அன்பு..!


                                                 

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

முதலிரவன்று!

பாதித்தூக்கத்தில் முழித்துக்கொண்ட
பின்னிரவில் படுக்கையில் புரளும்
பல நினைவுகள்..

கலைந்த போர்வைக்குள்ளே
கலையாத முகம் நீட்டி
பற்கள் காட்டும் சில நினைவுருவங்கள்..

கண்மூடி யோசனை மூடாது
நினைவின் சிறகுகள் அமரும்
நிகழ்வின் பல கிளைகள்...

தொடுக்கும் பூமாலையின்
வரிசையென ஒன்றைத்
தொடரும் மற்றொன்றின் நினைவு...

பயத்தைத் துணைக்கழைத்து
காதல் கைப்பிடித்து
வெறுப்பில் குளித்து
இயலாமையில் நெளிந்து
நிர்பந்தத்தில் மூழ்கும்
சில நினைவுகள்..

தெரியவேயில்லை எந்தவொரு
நினைவின் மீதியின் மிச்சதிலும் கூட..
களைத்துறங்கும் மனைவியின் முகம்!

 

                                                                         

புதன், 1 செப்டம்பர், 2010

அந்நாளின் மழை!

தனிவழி போன பாதையில் 
துணையென வந்து
வீடு சேர்த்தது அந்நாளின் மழை..

உன்வரவால் வசந்தங்கள் பூத்த 
நாளின் மலர்ப்பனியாகிப் போனதது..

மண்வாசமும், ஒருகுடையில் நடக்கும்போது
உன்வாசமும் தந்ததது...

அலையடிக்கும் கரையில் ஆடிக்களைத்தபோது 
குதூகலத்தின் குரலென கொட்டித்தீர்த்ததது..

மார்கழிப் பின்னிரவில் மையல் நீளும் 
பொழுதில் மோகத்தின் சாரலென ஆனதும்..  

இதழ்வருடி மேனியூர்ந்து தடம் பதித்த நாளின்
உயிர்த் துளியாகிப் போனதுமது..

ஓரிரவில் உனைத்தூக்கிப் போனபின்
இழப்பின் கண்ணீராய்ச்  சிந்தியதும்  இம்மழை தான்!