வியாழன், 26 ஆகஸ்ட், 2010

நிழல்களின் நடனம்

ஒவ்வொரு இரவிலும் கதைகேளாமல்

தூங்கியதில்லை என் ப்ரிய மகள்..

கதையாரம்பித்த கணத்தில்

எனை நிறுத்தித் தொடரும் பலசமயம்

வெள்ளையானையும் கொம்பு முளைத்த சிங்கமும்

உலவும் அவள் காடுகளில்..

மீன்கள் பறக்கும் மான்கள் நீந்தும்

புலிகள் சிரிக்கும் சில நேரங்களில்..

அவள் 'மம்மு'வில் பங்குண்டு

எல்லா மிருகங்களுக்கும்..

கரடியும் முயலும் அவளுடன்

போகும் வகுப்புகளுக்கு வாகனமேறி..

பாதிக் கதையில் மெல்ல முனகி

தூங்கியபின் இதமாய் பதித்து வெளியேறுகையில்

கட்டிலைச் சுற்றியலையும் காற்றில் தொடங்கும்

அவளுருவாக்கிய மிருகங்களின் நடனம்..


 

புதன், 25 ஆகஸ்ட், 2010

பிரிவிற்குப் பின் (அ) கையாலாகாதவன்

நடந்த அவலங்கள் கடந்திட
விழையும் அர்த்தமற்ற
விவரிப்புகளின் வழி..

உறவுச் சிக்கலின் முடிச்சுகளில்
இறுகி ஊசலாடும்  
நம்மாசை உணர்வுகள்..

வாழுமாசை வற்றினும்
வெற்றுயிர் சுமக்கும்
ஈர நிர்பந்தங்கள்..

தடமளித்த கண்ணீரும்
கனவின் பிம்பமும்
மீதமுனக்கு..

சோகம்நீளும் சொற்களும்
தீரா நினைவும்
துணையெனக்கு..

முடிவிலா இரவைத்துணைக்கழைத்து
ஊளையிடும் என் ஊமைக்காதல்.

                                                                 


                                                          

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

அம்மா!

தேவைக்களவாய் வேலைக்குச்
சரியாய் சமைக்கவே
மாட்டாள் அம்மா..

என் நட்பின் வருகை
நா தித்திப்பில்லாமல்
திரும்புவதேயில்லை..

எதிர்வீட்டு காயத்திரிக்கும்
பக்கத்துவீட்டு ஜோதிக்கும்
அவள்தான் ஊட்டவேண்டும்
மதியங்களில்..

முன் காக்கைக்கும்
பின் நாய்க்கும் வைக்கத்
தவறுவதேயில்லை ஒருநாளும்..

எந்தப் பிச்சைக்காரனும்
வெறுந்தட்டுடன் வீடு
கடப்பதேயில்லை அவள்முன்னால்..

முன்னறிவிப்பின்றி பின்னிரவில்
வீடுசேரும் நாளிலும்
தீர்ந்து போவதேயில்லை
பானைச் சோறும்
அம்மாவின் அன்பும்..

                                  

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

அவசரம்

ஒழுங்கின்மையின்  பெருக்கல் குறியென
வழிமறிக்கும் வாகனங்கள்
ஒவ்வொரு சாலை விளக்கிலும்..
கேளாமல் செய்தவுதவி
பெற்றுத் தந்ததேயில்லை
சிறு புன்னகையை..
தோன்றுமிடத்திலெல்லாம்
வரிசையுடைக்கும் சிலபேர்..
அவதியின் காலடியில் நசுங்கும்
நம் நன்றி சொல்லும் நிமிடங்கள்...
கால் மிதித்தலில் கவனமாய் திரும்பிக்கொள்ளும்
காணா முகமும் மன்னிப்பின் வார்த்தைகளும்..
முந்திச் செல்லும் முயற்சியில் எப்போதும்
முன்னிருப்பவர் மேல்  முட்டி நிற்கின்றன
நம் அவசர அலட்சியங்கள்..

                                                    

புதன், 18 ஆகஸ்ட், 2010

உமா சங்கருக்கு ஆதரவாக..

தமிழக அரசால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட உமா சங்கருக்கு ஆதரவாக பதிவுலகில் இன்று அனைவரும் ஒரு இடுகை எழுத தருமி ஐயா,  கார்த்திகைப் பாண்டியன்  வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்.

"உமாசங்கர் I.A.S. இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர் என்பது வெள்ளிடை மலை. புதிய திட்டங்கள், செயல் முறைகள் என்று தனக்கென ஒரு பாணியில் நற்பணி செய்து வந்த அவருக்கு இன்றைய அரசு அளித்துவரும் "தண்டனை" , அதற்குரிய காரணம் எல்லாமே என் போன்ற ஒரு குடிமகனுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.


நேர்மையான முறையில் வேலை பார்க்கும் ஒரு சில அதிகாரிகளையும் அதிகாரம் கொண்டும் அடக்க முயற்சிக்கும் அரசுக்கு தீவிரமான கண்டனங்கள்.. சுயலாபத்துக்காக அதிகாரிகளைப் பழிவாங்கும் போக்கினை இந்த அரசு கைவிட வேண்டும்.. துணிச்சலாக அரசை எதிர்த்து நிற்கும் உமாஷங்கரின் நேர்மையைப் பாராட்டுகிறோம்.."
( நன்றி கார்த்திகைப் பாண்டியன் )

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

பதின்மம்

எப்போதும் பதின்மர்கள் வேண்டும்
மரத்திலேறி காய் பறிக்க
சாமிக்கு முன் பந்தம் பிடிக்க
கயிறு கட்டி வரிசை மடக்க
சைக்கிளேறி செய்தி சேர்க்க
இன்ன பிறவுக்கும்...

தெருக் கடக்கும் எந்தப் பெண்ணும்
தப்பிப்பதேயில்லை
வலிக்காத கிண்டல்களிலும்
அலறாத சீட்டிகளிலிருந்தும்..

சிறார்களின் பெருமிதமும்
அக்காக்களின் அரவணைப்பும்
குன்ற விடுவதேயில்லை
குறுகுறுப்பை..

வீடு தெரியா நட்பு கொணரும்
காரணிகளாகும்
புகையும், பகையும்..

அரசாங்கத் தேர்வுகள்
அச்சுறுத்தினாலும்
ரெட்டைஜடை தாவணித்
துரத்தல்கள் குறைவதில்லை..

வாழ்வின் புரிதலில்
நுழையும் வாசல்களாகும்
பதின்மத்தின் கடைசிப்படிகள்..

                                                           

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

அவலம்

சிவப்பின் காத்திருப்பில்
மெல்லிய குரல்..

'அண்ணா பூ வாங்கிக்கங்கண்ணா'

'வாங்கி என்ன செய்ய, வேண்டாம்மா'

'அண்ணிக்கு வாங்கிட்டுப்போங்கண்ணா'

'இன்னும் கல்யாணம் ஆகலம்மா'

'அம்மாக்கு வாங்கிக்குடுங்கண்ணா'

'அம்மா பூ வைக்க மாட்டாங்கம்மா'

'வீட்ல சாமி படத்துக்கு போடுங்கண்ணா'

'கடவுள் நம்பிக்கை இல்லம்மா'

'அக்கா தங்கச்சிக்கு   வாங்கிக்கங்கண்ணா'

'எல்லாருக்கும் கல்யாணம் ஆயிடுசும்மா'

'மொழம் பத்து ரூபாதாண்ணா வாங்கிக்கங்கண்ணா'

'வேணாம்மா, போ!'

முகம்கவிழ்ந்து பின் சென்றாள்
பச்சை கிடைத்ததும் 
வேகமெடுத்து முன்செல்ல
முகத்திலடித்தது  பூமணம்
அவளின் வறுமை வாசம் சேர்த்து...

                                                                       

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

காதல் மரம்

பார்வைகள் பின்னிய பொழுதில்
உணர்வெழுச்சியின் உச்சத்தில் ஓர்
விதையிட்டுச் சென்றோம்...

முத்தங்களின் ஈரத்தில்
அணைப்பின் வெப்பத்தில்
நம்பிக்கையுரத்தில்  மெல்லச்செழித்ததது...

வேர் நீட்டி  கிளை பரப்பி விருச்சமென
விரிந்தது நம் காதல் மரம்...

ஆயிரம் கைகள் நீட்டி
அரவணைத்தது  அதன் ப்ரிய நிழலும்...

பின்னொரு நாளின் இருள் சூழ் இரவில்
முறித்துக்கொண்ட நம்முறவை
இலையசையாது பார்த்துக்கொண்டிருந்ததது...

சந்தோசப்பூக்கள் பூத்த அதன் நுனியில்
வெறுமைத்திரவம் வழிகிறது இப்பொழுது...

தீட்டிய மரத்தில் கூர் சோதிப்பென
சந்தேக  வெட்டுக்கள் வார்த்தைக்  கத்திகளால்...

பிரிவின் கோடலியால் சந்திப்பின்
கிளைவெட்டித் தள்ளினாலும்
மண்ணோடிப்போயிருக்கும்
நினைவின் வேர்களை என்ன செய்ய?..

                                                                          

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

முடிவிலி

சந்திப்புகளின் கடைசிக் கணங்கள்
பிரிவின் பெருவெளிப் படிகளாதலால்
துறக்க எத்தனிக்கிறேன்
நம் சந்திப்புகளை..
முகம் பாரா நாட்களில்
நீண்ட என் மனக் கரையை
விழுங்கிடத் துடித்து  நில்லாமல்  வரும்
உன் நினைவலைகள்...
அலையடித்து ஓய்ந்த ஓர்
சுழற்சியின் முடிவிலியாய்
பின்னியிருக்கிறாய் என் கனவுகளில்...
கணக்கற்ற கனவுகளின் ஓயாத
பெருங்குரல் சத்தங்களில்
திறந்து கொள்கின்றன நம்
சந்திப்புக்கான வாசல்கள்..
சந்திப்புகளின் கடைசிக் கணங்கள்?...
                                                                     

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

அன்பின் நீட்சி

காயமுற்ற நாயொன்றின்
காயாசேற்றின் அக்கறையுதறி
கரிசனத்தின் தூதராகி
கைகொள்ளாது மார்பனைந்து
" பாவம்ப்பா " வென,
முகம்பார்த்து நீர்கோர்த்து
மறுப்பேதும் நிகழாதென
மருந்திட்டு துணிசுற்றி
முத்தம்சிந்தி உடல்நீவி
பரிதவித்துப் பாலூட்டி
கவனித்தரவனைக்கும்
ப்ரியமகள் எனக்களிக்கும்
அன்பின் நீட்சியானதது!