வெள்ளி, 16 ஜூலை, 2010

கையறு நிலை

என் ப்ரிய மின்விசிறி

அச்சமூட்டுகிறது சமீபமாக...

எங்களுக்குள் சுமூக நிலை

குறைந்து கொண்டே வருகிறது...

சுழன்றடிக்கும் அதன் வேகத்தில்

தடுமாறிப் போகிறேன் சில சமயம்...

வெறுப்பின் சத்தங்களை

முனகலாய் தெரிவிக்கிறது அது...

கனமில்லாத என் காகிதங்களை

அறை முழுதும் சிதறடிக்கிறது...

தெள்ளிய அன்புச் சுடரை

எரிய விடுவதேயில்லை எப்போதும்...

வஞ்சக கங்குகளை அடங்க

விடுவதேயில்லை ஒருபோதும்...

ஈர எண்ணங்களை காய்ந்து

விடச் செய்கிறது அடிக்கடி...

அவ நம்பிக்கை தூசுகளை

எங்கும் படியச் செய்கிறது...

வன்மத்தின் வெம்மையை

வழியவிடுகிறது என் மீது...

அடக்கும் விசை தெரியாமல்

அல்லாடுகிறேன்,

மனமென்னும் மின்விசிறியை...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக