புதன், 28 ஜூலை, 2010

நீளும் காத்திருப்புகள்

வரிசை மிகும் கேள்விகளின்
ஒற்றை பதில் எழுதவிருக்கும்
என் முகம்..
கேட்டறியாமல்  தன்னிச்சை
சுயபிம்பம் கட்டிடத்
தளைப்படும் நீ..
முடிவுறா மௌனத்தில் 
சில துளி கண்ணீரும்
திரும்பி நடத்தலில்
சிறு தடுமாற்றமும்
கேள்வியின் மிச்சங்களனப்படுமா?
கேளாமல் பதிலுரைக்கும்
கலையை யாரிடம் கற்க?
பதில் பெறுவன பழமைகளாகி
நீளும் காத்திருப்புகள்
நின் கேள்விகளுக்காய்..
                                             

வெள்ளி, 23 ஜூலை, 2010

இழப்பின் வலி

நெஞ்சக் கூக்குரலின் அடர்த்தியை உதடுகள்

கனத்த மௌனங்களாய் மொழிபெயர்க்க...

இமை கிழிக்கும் இழப்பின் வலிகள்

எண்ணிலடங்கா கண்ணீர்த் துளிகளாய் உருமாற..

குருதி எரித்திடும் துக்கத்தின் அனல்கள்

மூச்சுக் காற்றாய் வெளியேற...

தேங்கிய சிந்தனைகள் உன் நினைவச்சுகளில்

அறையப்பட்டு அலறிக் கிடக்க..

கூரிய வேதனை முட்கள் உடலெங்கும்

குத்தி முறிந்து கிடக்க...

உன் பிரிவின் அவலங்களை முகமெங்கும்

அள்ளிப் பூசிக்கொள்கிறேன் நான்..

                                                                         

திங்கள், 19 ஜூலை, 2010

உறவின் முறிவுபழகிய பாதையில் குத்திய

முள்ளை விடவும் வலித்தது

என் மீதான உன் அலட்சியங்கள்...


நாம் வளர்த்த சந்தோஷ மீனின் வாழ்நாள்

குறைந்து கொண்டே வருகிறது

நம் விட்டுக்கொடுத்தலின் துளிகள் குறைவதால்...


இணைந்திருந்த நம் காதலின் பாதைகள்

இப்போது எதிரெதிர் திசைகளாயின..


அக்கறையின் பிஞ்சுக் கன்னங்களில்

ஓங்கி அறைகிறது நம் சுயநலங்கள்..


எப்பொழுதும் தோற்கிறது,

ஒப்பனைப் பொய்கள் முன்

நம் அழுக்கான உண்மைகள்...


இப்பொழுதும் காத்திருக்கின்றன

நமக்கான நம் நிமிடங்கள்..

                                                                                                                        
                                     

வெள்ளி, 16 ஜூலை, 2010

கையறு நிலை

என் ப்ரிய மின்விசிறி

அச்சமூட்டுகிறது சமீபமாக...

எங்களுக்குள் சுமூக நிலை

குறைந்து கொண்டே வருகிறது...

சுழன்றடிக்கும் அதன் வேகத்தில்

தடுமாறிப் போகிறேன் சில சமயம்...

வெறுப்பின் சத்தங்களை

முனகலாய் தெரிவிக்கிறது அது...

கனமில்லாத என் காகிதங்களை

அறை முழுதும் சிதறடிக்கிறது...

தெள்ளிய அன்புச் சுடரை

எரிய விடுவதேயில்லை எப்போதும்...

வஞ்சக கங்குகளை அடங்க

விடுவதேயில்லை ஒருபோதும்...

ஈர எண்ணங்களை காய்ந்து

விடச் செய்கிறது அடிக்கடி...

அவ நம்பிக்கை தூசுகளை

எங்கும் படியச் செய்கிறது...

வன்மத்தின் வெம்மையை

வழியவிடுகிறது என் மீது...

அடக்கும் விசை தெரியாமல்

அல்லாடுகிறேன்,

மனமென்னும் மின்விசிறியை...

போலி முகம்நமக்கான முகமூடிகளை நாமே

தயார் செய்து கொள்கிறோம்..

மிகக் கச்சிதமாக அவை பொருந்தி விடுகின்றன

நம் முகத்தின் மேடு பள்ளங்களில்..

முகத்திரையின் சலனங்களை அவை

ஒருபோதும் வெளிக்காட்டுவதே இல்லை..

மிகச் சரியாய் பாவனைகள் செய்கின்றன

மகிழ்ந்து சிரிப்பது போல்..

சிலநேரங்களில் கண்ணீர் பெருக்கிக்

கொள்கின்றன அழுவது போல்..

எளிதாக கற்றுக் கொள்கின்றன

அதீத வன்மம் வளர்க்க..

இயல்பாய் இருப்பது போல் நடிக்கின்றன

பொறாமைத் தீயின் ஜ்வாலைகள்

வெளித் தெரியாதபடி...

கையறு நிலைகளில் வெறித்துப் பார்க்கின்றன

எந்தச் சலனமும் இல்லாமல்..

சற்றுக் கலைந்த முகமூடிகளை கவனமாய்

நாம் சரி செய்து கொள்கிறோம்

ஏதேனும் இயல்புகள் வெளிவந்து விடாதபடி..

முகமூடிகள் இல்லாமல் எப்போதும் நாம்

சந்திப்பதே இல்லை சக மனிதனை..

வியாழன், 8 ஜூலை, 2010

மழை


மழை வரும் நாட்களில் ஓடி ஒளிந்து
கொள்பவன் நானில்லை...
வானுக்கும் பூமிக்கும் நிகழும் உறவின்
உச்ச நிலை அமிர்தம் அது...
வான்மழை வலுக்கும் முன்பே
சுவாசமெல்லாம் நிறைகிறதே மண்வாசம்..
வீழும் மழைத்துளியால் வீடெங்கும்
சந்தோஷச் சிதறல்கள்..
ஓட்டுச் சரிவில் விழும் நீரை
முகத்திலடிக்கும் தங்கையின் பற்களும்
நடுங்கும் குளிரில்..
கொல்லை வேம்பும் குயிலும்
தலை சிலுப்பும் தன்னிச்சையாய்...
வெளிச்சமடிக்கும் மின்னலும் பெருங்குரல்
இடியும் கலைத்ததில்லை எங்கள் ஆட்டத்தை...
குடை பிடித்தோடி வரும் அம்மாவின்
அன்பிலும் நனைய
இன்னும் வேண்டும் மழை...

வியாழன், 1 ஜூலை, 2010

முதல் இடுகை..

இது என் முதல் படி..
புன்னகையுடன் துவங்குகிறேன் :)

என் கை பிடித்து அழைத்துச் செல்லும்
உன் ப்ரியம் என்னை வெறுப்பின் வெளி வாசல் கூட
அண்ட விடுவதில்லை...