செவ்வாய், 28 டிசம்பர், 2010

பத்தாண்டுகளில் பத்துப் பாடல்கள் - தொடர்பதிவு

அன்பு நண்பர் பாலா கடந்த பத்தாண்டுகளில் பிடித்த பத்து  பாடல்களை தொகுக்கும் தொடர் பதிவிற்கு அழைத்திருந்தார். அவருக்கு என் நன்றி.

தமிழ் திரையிசைப் பாடல்களை கேட்டு வரும் ஒரு சாதாரண ரசிகனாய், விமர்சனப் பார்வையில்லாது ஒரு சின்ன யோசிப்பில் விளைந்த ஒரு சிறு கணக்கீடு.

தமிழில் வருடத்திற்கு சராசரியாக சுமார் நூறு படங்கள் வெளியாகின்றன. படத்திற்கு சராசரியாக ஐந்து பாடல்கள் எனக் கணக்கிட்டால் ஐநூறு பாடல்கள் வருடத்திற்கு. அவற்றுள் ஐம்பது சதவீதப் பாடல்கள் பல்வேறு காரணங்களால்  வெளிவந்த சுவடே தெரியாமல் போய்விடுகின்றன. மீதமுள்ள ஐம்பது சதவீதத்தில் இருபது சதவீத பாடல்கள் அதாவது ஐம்பது பாடல்கள் முதல் முறை கேட்டவுடன் மக்கள் மனதில் இடம் பிடிக்கின்றன. அடுத்த பத்து சதவீதப் பாடல்கள் சேனல்களின்  இடைவிடாத நச்சரிப்பால் ( கொலைவெறியை கிளப்பும்  பாடல்களும் ) ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்து தொலைகின்றன.
அதாவது வருடத்திற்கு சுமார் எழுபத்தைந்து பாடல்கள். பத்து வருடங்களில் எழுநூற்று ஐம்பது பாடல்கள் ;)
என்ன மயக்கம் வருதா? சரி இசை கொண்டு  தெளிய வச்சுருவோம்! ;)

இப்பதிவில், மெல்லிசை, மயக்குமிசை, கிராமிய இசை, குத்துப் பாட்டுக்கள், ரீமிக்ஸ் பாடல்கள், கொலைவெறிப் பாடல்கள் தவிர்த்து துள்ளலிசை பாடல்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன். உங்களுக்கும் பிடிக்கும் என.

1.யாக்கைத் திரி, காதல் சுடர் - ஆய்த எழுத்து - 2004

மனதை மயக்கும் மெல்லிசை எவ்வளவு மகிழ்ச்சி தருமோ அதேபோல் சில துள்ளலிசைப் பாடல்களும்  குதூகலம் தருபவை, அவற்றுள் எப்போதும் முன்னால் நிற்பது இப்பாடல். ஆஸ்கர் நாயகன் ரகுமான் இசையமைத்து அவருடன் சுனிதா சாரதி சேர்ந்து  பாடிய பாடல். இப்பாடல் வைரமுத்துவின் கவிதைத் தொகுப்பிலுள்ள ஒரு கவிதையின்  சிலவரிகள் மட்டும் இடம்மாற்றி உருவாக்கப் பட்டது. மழை ஓய்ந்தபின்பும் சாரல் தொடர்வது போல பாடல் முடிந்தும் அதன் அதிர்வு தொடரும் நாளெல்லாம்.

2.ஓராயிரம் யானை கொன்றால் - நந்தா - 2001

மெல்லிசைக்கு பெயர்போன யுவன்சங்கர் ராஜாவின் ஆரம்ப கால பாடல்களுள் அதிர வைக்கும்  ஒன்று. இந்த வேகமிசைப் பாடலைப் பாடியது உன்னிக் கிருஷ்ணன் என்றால்  நம்புவது கொஞ்சம் கடினம் தான். உன்னிக் கிருஷ்ணனின் தேன்குரல், ஹை பிச்சில் செய்யும் மாயாஜாலங்களை மிஸ் செய்து விடாதீர்கள்.

3.தீபாவளி தீபாவளி - சிவகாசி - 2005

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் ஒரு வேகமிசைப் பாடல். பாடல் வரிகள் பற்றி உஹூம்..ஒன்றும் சொல்வதற்கில்லை,  பாட்டின் இசையில் இடையே  இட்டுநிரப்புவதற்காக மட்டும் தான். இப்பாடலை எழுதியது யாரென்று தெரியவில்லை அவருக்கு என் வருத்தம் கலந்த சாபங்கள்.


4.ஆல் டே ஜாலி டே - மனதை திருடி விட்டாய் - 2001

யுவன் ஷங்கர் ராஜாவின் மற்றொரு பாடல். ஷங்கர் மகாதேவன் மற்றும் யுவன் சேர்ந்து பாடியது.  கல்லூரிப் பருவத்து கவலையில்லா நாட்களின் நினைவுகள் இப்பாடல். Life is  a game show :)5.உயிரின் உயிரே - காக்க காக்க - 2003

ஹாரிஸ் ஜெயராஜின் ஆல் டைம் பேவரிட் இப்பாடல். தாமரை வரிகள் இன்னும் இன்னும் என கேட்கத் தூண்டும். படத்தின் தொடக்கத்திலே இப்பாடல் வந்துவிட்டதால் படம் முழுவதும் அந்த அதிர்வு இருந்து கொண்டே இருந்தது.6.சரோஜா சாமான் நிக்காலோ - சென்னை 600028 -  2007

மறுபடியும் யுவன். இம்முறை ஷங்கர் மகாதேவனுடன் பிரேம்ஜி அமரனும் அதிர வைத்திருப்பார்கள். எப்போதும் வெற்றிக் கூட்டணியான  யுவன் - வெங்கட் பிரபு கூட்டணியின் "மங்காத்தா"வுக்கு ஆவலோடு காத்திருக்கிறேன்.  இப்பொழுதெல்லாம் யுவனின் இசையில் மெல்லிசைப் பாடல்களே மிக அதிகமாய் வருகின்றன. அவர் ஒரு பேட்டியின் போது குறிப்பிட்டார், மெல்லிசைப் பாடல்கள் தான் காலங்கள் கடந்து நிற்குமென்று. அதனால் தான் அவர் இப்பொழுது வேகமிசைப் பாடல்கள் அதிகமாக உருவாக்குவதில்லையோ என்னவோ?7.சம்போ சிவா சம்போ - நாடோடிகள் - 2009

சுந்தர் சி பாபுவின் இசையில்  ஷங்கர் "மஹா" தேவன் பின்னிப்  பெடலெடுத்திருக்கும் வேகமிசைப் பாடல். கேட்கும் போதே உடம்பில் ஒரு வீறு எழுமே! அப்பப்பா!8.மாரோ மாரோ - பாய்ஸ் - 2003

ரஹ்மானின் மற்றொரு பாடல். ஆரம்பத்திலும் இடையிலும்  வரும் ட்ரம்ஸ் துள்ளவைக்கும் மனதை ;) ஷங்கர் தன்னுடைய படங்களில் கண்டிப்பாக ஒரு துள்ளலிசைப் பாடலாவது வருமாறு பார்த்துக் கொள்வார். அதை அவரது முதல் படத்திலிருந்து சமீபத்திய படம் வரை தொடர்ந்து  கொண்டிருக்கிறார்.9. பைவ் ஸ்டார் பைவ் ஸ்டார் - 5 ஸ்டார் - 2002


சிறகடித்துத் திரிந்த கல்லூரி பருவத்து நாட்களின் நட்பின் கைகோர்ப்பு இப்பாடல். அனுராதா ஸ்ரீ ராம் பாடியது. இப்பாடலுக்கு இசை பரசுராம் ராதா.

பாடல்கள் கேட்டாச்சா? கால்கள் தாளம் போடுதா இன்னும். என்ன, பத்து என்று சொல்லிவிட்டு  மேலே மொத்தம் ஒன்பது பாடல்கள் தான் இருக்குன்னு நினைக்கிறீங்களா? அந்த பத்தாவது பாடல் நீங்க சொல்வதற்காகத்தான். நான் குறிப்பிட இந்த மாதிரி துள்ளலிசை (அ) வேகமிசைப் பாடல்களில் கடந்த பத்தாண்டுகளில்  உங்களுக்குப் பிடித்த பாடல் ஒன்றை பின்னூட்டத்தில் சொல்லிவிட்டுப் போங்கள் அன்புள்ளங்களே!

பிறக்கும் புத்தாண்டு எல்லோருக்கும், எல்லாவகையிலும் கொண்டாட்டமாய் அமைய என் வாழ்த்துக்கள்!   Happy New Year :)


    

வெள்ளி, 17 டிசம்பர், 2010

பிரிவுத் துயர், இன்னும் கொஞ்சம்..மாலைச் சூரியன் மரித்த நேரம்
பிரிவின் சிலுவை சுமக்கலானோம்
காதல் முழுங்கி கனத்தும் போனோம்
வேதனை வெம்மைகள் வெளிக் காட்டாமல்..


வெற்றுப் பார்வையில் வெந்தழியச் செய்தாய் 
கடைக்கண் தைத்த என்னிதயத்தை 
தென்றலைப் புறந்தள்ளும் கடைசிக் கையசைப்பில் 
அருவி பெருகியது  அணை போட்ட கண்களில்..


உன்  முத்தங்கள் சிந்திய என்னுதட்டுப் பிரதேசம் 
வெடிப்புகளோடிய  வெற்றுநிலமானது 
தோய்ந்த உன் நினைவுகளில் வருத்தங்கள் வடித்தெடுத்து 
நிரம்புகிறது இக்கணக்கோப்பை..


வார்த்தைகளற்று நீளும் மன வலியில்
மௌனங்களேற்றிக் கண்ணீர் சிந்தட்டும் 
உனக்கான இக்கடைசிக் கவிதையும்!   
                                                                            

செவ்வாய், 7 டிசம்பர், 2010

வெயில்

வட்டமாய் சுற்றி நின்று
குவிலென்சை குவித்து
காகிதம் எரிக்கும்  நேரம்
சோதனைச் சாகசம் பற்களில்..

செய்து வைத்த களிமண் வண்டியும்
ஈரம் சேர்ந்த சட்டையும்
காய்ந்து போயிருக்கும் சட்டென..

ஓட்டடுக்கின் இடையில் நுழைந்து
வெண்புள்ளிக் கோலம் போடும்
தாழ்வாரக் கடையில்..

தலை துண்டோடு வாடிவரும்
வண்டிக் காரனுக்குத் தரும்
வடித்த கஞ்சியிலும் வண்ணம் தெறிக்கும்..

பனைநுங்கும் தென்னை விசிறியுமாய்
புழக்கடை போகும்
சட்டையில்லா அம்மத்தாக் கிழவி..

மதியக் கண்ணுறக்கம் மறந்த
வாசல் விளையாட்டில் ஒரு
நண்பனாய் சேரும் வெயில்..

அந்நிய தேசத்தில் ஏசிக் குளிரில்
ஜன்னல் காட்சியின் நினைவில்
வெயிலேறி விளையாடும் வீடு...


                                                          

வியாழன், 2 டிசம்பர், 2010

மயக்கும் குரல்கள் - தொடர் பதிவு

இத்தொடர் பதிவிற்கு என்னை அழைத்த அன்பு நண்பர் பாலாவிற்கு என் நன்றிகள்.

பெண்கள், பெண்களின் மனதை வெளிப் படுத்தும் பாடல்கள் எண்ணிலடங்கா.. சில பாடல்கள் பெண்குரலில் இன்னும் மெருகேறும் என்பது என் கருத்தும். அவைகளில்  எதனை கோர்க்க எதனை விட?!   
சில பாடல்கள் சில மனநிலைகளில் கேட்கும்போது இதம் தரும். சில பாடல்கள் கேட்கும் போதோ  சில மனநிலைகளையே உருவாக்கும் வலிமை படைத்தவை. அவ்வாறான பாடல்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன். உங்களுக்கும் பிடிக்குமென :)

என் இந்தத்  தொகுப்பில் வரவேண்டிய சிறந்த பாடல்கள் பலவற்றை  ஏற்கனவே நம் பதிவுலக நண்பர்கள் தொகுத்திருக்கிறார்கள். அதனால் அது தவிர்த்து சில!

ஒரு தெய்வம் தந்த பூவே - கன்னத்தில் முத்தமிட்டால்


எனக்கு எப்போதும் விருப்பமான "குரல் தேவதை"  சின்மயியின் இதமான குரலில் வைரமுத்துவின் வைர வரிகளில் ரகுமானின் பூந்தென்றல் இசையில் காதின் வழி சென்று மனதின் ஒவ்வொரு அறைகளிலும் நிரம்பும் பாடல். முன்பே சொன்னது போல் எப்போது கேட்டாலும் உயிரூடுருவும் நிலையைத் தரும் பாடல். கடைசியில் வரும் பல்லவியில் உரு(க்)கி இருப்பார் சின்மயி. எனது மிக விருப்பப் பாடல் எப்போதும்!

பேசுகிறேன் பேசுகிறேன் - சத்தம் போடாதே

கொஞ்சும் குரல் கொண்ட நேஹா பாடியது. இள மாலை வேளை, மிதமான வெயில், மொட்டை மாடி, நீல ஆகாயம், தேநீர், வருடும் தென்றல், இப்பாடல்!

கண்ட நாள் முதலாய் - கண்ட நாள் முதல் 

இது முருகனை நினைத்துப் பாடிய ஒரு பக்திப் பாடலானாலும், கேட்கும் போது மெல்லிய துள்ளல் தொடரும். சுபிக்ஷா மற்றும் பூஜா எனும் இருவர் பாடியது. யுவன் ஷங்கர் ராஜா சேர்த்திருக்கும் புல்லாங்குழல்  இசையும், இரண்டாவது சரணத்தில் வரும் சாக்ஸ போனும் துள்ளலை கூட்டும். 

காற்றின் மொழி - மொழி

சுஜாதாவின் இனிய குரலில், வித்யா சாகரின் இசையில் மிக மெல்லிய மென்னிசைப் பாடல். இந்தப் பாடல் கேட்டு முடித்தபின் பார்ப்பது எல்லாம் அழகாய்த் தோன்றும் :)

மலர்களே மலர்களே - புதுக்கோட்டையிலிருந்து சரவணன் 

வசீகர குரலுடைய பாம்பே ஜெயஸ்ரீன் தேனினிமைப் பாடல். பின்னிரவில், தூக்கம் துரத்தும் நேரத்தில், கண்மூடி,  ஹெட் போனில் இப்பாடலைக் கேட்டுப் பாருங்கள். கண்டிப்பாய் அடிமையாகி விடுவீர்கள் அவர் குரலுக்கும் இப்பாடலுக்கும் ;)

போறாளே பொன்னுத்தாயி - கருத்தம்மா 

தனிச் சிறப்பான சொர்ணலதாவின் குரலில் ஒரு சோகப் பாடல். அபலையின் வாழ்வை மிகச் சிறப்பாய் தன் குரல் வழி பிரதிபலித்திருப்பார். தேசிய விருது பெற்றுத் தந்தது  இப்பாடல்.

நான் முத்தம் தின்பவள் - குரு 

இப்படியெல்லாம் கூட சின்மயியால் பாட முடியுமாவென வியந்து போன பாடல். மிக வேகமாகவும் குரலில் சிறு பிசிறு கூட வராமல் ஆவர்த்தனம் நடத்தியிருப்பார் அந்தக் குரல் தேவதை. இப்பாடல் கேட்டவுடன் நமக்கே மூச்சு வாங்கும்.

செந்தூரப் பூவே - பதினாறு வயதினிலே 

குரல் அரசி ஜானகியம்மாவின் பல பாடல்கள் இவ்வரிசையில் தொகுக்க வேண்டும். அதுவே பல பதிவுகள் வருமாகையால் அவற்றிலிருந்து மிகப் பிடித்த மயக்கும் பாடல் ஒன்று.

தேவதை வம்சம் நீயோ - சிநேகிதியே 

சின்னக் குயில் சித்ராவும், சுஜாதாவும் இணைந்து பாடிய துள்ளலிசைப் பாடல்.
இரு பெண்களின் நட்பின் வடிவம் பாட்டில்.

தாலாட்டும் பூங்காற்று - கோபுர வாசலிலே 

ஜானகியம்மாவின் மற்றொரு பாடல். சரணத்தில் வரும் புல்லங்குழல் இசையும் அதையொத்த ஜானகியம்மாவின் குரலும் அற்புதம்.

மயில் போல பொண்ணு ஒன்னு / இது சங்கீதத் திருநாளோ  - பாரதி / காதலுக்கு மரியாதை  
மயில் தோகை கொண்டு வருடியது போலிருக்கும் பவதாரிணியின் குரல். இன்னும் அவரது குரலில் சில பாட்டுக்கள் இருந்தாலும் இவையிரண்டும் மிகச் சிறப்பு.

இது போல இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். உங்களின்  நலம் கருதி இப்பொழுது இதை முடித்து, பிறிதொரு சந்தர்ப்பத்தில் இன்னும் சொல்கிறேன்.

                                                                                                                                                  

செவ்வாய், 30 நவம்பர், 2010

சிதறல்கள் 2

நீ கேட்ட கணத்தில் வரமறுத்த
கவிதைக்கீடாய் இதமணைத்து
தடம்பதித்தேன் இதழ்களில்..
பலநூறு கவிதையென்றாய்..
சேருமிடத்தில் தான்
சிறப்பாகிப் போகிறதெதுவுமென
மீண்டும் மெய்ப்பிக்கிறாய்..
இதழ் சேர்ந்ததால் தானே
முத்தமும் கவிதையென்றானது ..
கடல்மேல் பெய்துபோன
மழைக்கென்ன பெயர் தோழி?

*******************************************************************

தேடித் தேடிக் கோர்த்தும்
எழுத்துச் சரம் தான் மிஞ்சுகிறது
இதழ்முத்தம் சிந்தி போ
கவிதைச் செடியின்
முதல் வார்த்தைப் பூக்கட்டும்..

*****************************************************************

முகத்திலடிக்கும் காற்றும்
குளிர்ந்து போனது
உன் முத்தத்தின்
ஈரத்தை கவர்ந்து கொண்டு....

*****************************************************************

வண்டி நிறுத்தி
வாகாய் நடந்து
வாசல் திறக்கிறாய் நீ!
முண்டியடித்து
முதலாய் நுழைகிறது
உன் ப்ரியம்..

***********************************************************************

                  

வெள்ளி, 26 நவம்பர், 2010

ரஜினியும் நானும் பின்ன கொஞ்சம் கற்பனையும்

அன்பு நண்பர் சதீஷ் என்னை இத்தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார், முதலில் அவருக்கு நன்றி!
ஏற்கனவே தீவிர ரஜினி ரசிகர்கள், கமல் ரசிகர்கள், அஜித்தின் அன்புத் தம்பிகள் அவர்களின் பார்வையில் ரஜினியின் "டாப் டென்" படங்கள் தொகுத்திருந்தார்கள்.
ஒரு சாதாரண சினிமா ரசிகனாய், உலகப் படங்கள் பார்த்திராத ஒரு சராசரி பிரஜையாய், கொஞ்சம் கற்பனையுடன் இப்பதிவை எழுதுகிறேன்.

ரஜினி : ஒற்றைச் சொல்லில் ஒளிந்திருக்கும் ஒரு சாம்ராஜ்யம்! பல்வேறு விமர்சனங்கள் வரிசை கட்டி வந்தாலும், புகழின் சூரியன் தலைமேல் எப்போதும் ஒளிர்ந்தாலும் எளிமையாய் தன்னைத் தேடிக் கண்டடைய துடிக்கும் ஒரு சாதாரணன். இயக்குனர்களின் நடிகன். இதற்கு மேல் அவரைப் பற்றிச் சொன்னால் அடிக்க வருவீர்கள் ஸோ.. கவுண்டவுன் ஸ்டார்ட்.
கொடுக்கப் பட்டிருக்கும் வரிசை எண் ஒரு வரிசைக்காகவே அன்றி தரத்தை, சிறப்பை அளவிடும் பொருட்டு அல்ல எனக் கொள்க!

10. தில்லு முல்லு - தி எவர் கிரீன் காமெடி 

இரண்டு ரஜினி, இரண்டும் ஒரே ரஜினி என ஆள் மாறாட்டக் கதையில், நகைச்சுவையில் அடித்துத் துவைத்திருப்பார் ரஜினி. தேங்காய் சீனிவாசனைப் புல்லரிக்க வைக்கும் காட்சி ஒரு சின்ன சாம்பிள் மட்டுமே. ஏற்கனவே ரஜினியுன் சேர்ந்து நடித்திருந்தாலும், ரஜினியின் மீதுள்ள நட்பினாலும், பாலச்சந்தரின் மீதுள்ள மரியாதையாலும், ஒரு சிறு வேடத்தில் கிளைமாக்சில் தோன்றுவார் கமல்!

9. ராகவேந்திரா - தி ஸ்பிரிட்சுவல் மேன்

ராகவேந்திரரின் தீவிர பக்தரான ரஜினி அவரின் கதையில் மிகச் சிறப்பாய் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அமைதியான, ஸ்டைல் இல்லாத ரஜினியையும் மக்கள் ரசித்தார்கள்.
8. பாட்ஷா - தி ஒன் மென் ஷோ!

நிறைய ரஜினி ரசிகர்களுக்கு மிகப் பிடித்த படம். பஞ்ச் வசனங்களால் ரசிகனை கட்டிப் போட்ட படம். தங்கைக்காக மருத்துவக் கல்லூரியில் பேசும் ஸ்டைலும், வாயில் ரத்தம் ஒழுக அடிவாங்கியபின் சிரிக்கும் ரஜினியின் முகமும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.

7. படையப்பா - தி லயன் 

பாட்ஷாவை எப்படி மார்க் ஆண்டனி  இல்லாமல் டிபைன் பண்ண முடியாதோ அதே போல் படையப்பாவிற்கு ஒரு நீலாம்பரி! தனக்கு இணையான ஒரு கதாபத்திரத்திற்கு ரம்யா கிருஷ்ணனை செலக்ட் செய்ததே ரஜினி தான். மிக வேகமான திரைக்கதை மற்றொரு சிறப்பு!6. சிவாஜி - தி பாஸ் 

ஒரு ரூபாயில் இழந்த சொத்துக்கள் மீட்கும் சுவாரசியமும், ஷங்கரின் திரைக்கதை உத்தியும், பிரம்மாண்டமும், மொட்டத்தலை ரஜினியும் பெரிய பிளஸ்.5. எந்திரன் - தி ரோபோ 

சிவாஜி தி பாஸ் என்றால் எந்திரன் தி மாஸ், பல விமர்சனங்கள் இருந்த போதிலும் ஒட்டு மொத்தமாக ஒரு நல்ல பொழுது போக்கு படமாக அமைந்தது இது. வில்லன் ரஜினியும் பலநூறு ரஜினியின் சண்டை காட்சிகளும் ரசிகனுக்கு பெரிய விருந்து! இந்தப் படத்தின் வெற்றி ரஜினியை இந்தியாவின் ஐகானாக மாற்றியது.4. ஹரா - தி வாரியர் 

சுல்தான் என்று பெயர் வைக்கப் பட்டு பின் ஹரா என மாற்றம் செய்யப் பட்ட இந்தியாவின் முதல் அனிமேசன் படம் என்ற பெருமை பெற்றது. அனிமேசன் ரஜினியும் நிஜ ரஜினியும் சந்தித்துக் கொள்ளும் காட்சியில்  ரசிகர்களின் ஆராவாரம் அரங்கத்தையே அசைத்துப் பார்த்தது.3. எந்திரன் 3 - தி ஹியூமன் மெசின் 

எந்திரன் -1 மற்றும் எந்திரன் -2 வெற்றியைத் தொடர்ந்து மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப் பட்ட எந்திரன் - 3 முந்தைய படங்களின் வசூலை வெளியிட்ட முதல் மூன்று நாட்களிலேயே பெற்று பெரிய சாதனை படைத்தது. ரஜினியின் ஸ்டைலை முப்பரிமாணத்தில் ( 3D ) பார்த்தது பேருவகை!2. ரஜினி - தி சூப்பர் ஸ்டார் 

ரஜினியின் சொந்த வாழ்கையை அடிப்படையாகக் கொண்ட இக்கதையில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். நடித்திருந்தார் என்பதை விட வாழ்ந்திருந்தார் என்பதே மிகப் பொருத்தம்.
எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்த ஒரு படமாகத் திகழ்ந்தது இது. ரஜினியை எப்போதும் விமர்சிக்கும் பல விமர்சகர்களும் இப்படத்தை பாராட்டியது உண்மை!

1. சிவன் - தி டெஸ்ட்ராயர் 


ஆரம்ப காலங்களில் ரஜினியும் கமலும் சேர்ந்து நடித்திருந்தாலும் அவரவர் பாதைகள் தேர்ந்தெடுத்துக் கொண்டபின், நீண்ட வருடங்கள் திரையில் சேந்து நடிக்கவே இல்லை.
அந்தக் குறையை இப்படம் போக்கியது எனலாம். ஒரு வரலாற்று உண்மையை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தால் ஒன்று சேர்ந்த இருவரும் நட்பின் இலக்கணமாய்   இருந்தனர். பல விருதுகள் குவித்த இப்படம் தமிழ்த்திரைப்பட வரலாற்றில் ஒரு அடையாளமாக கருதப்படுகிறது.டிஸ்கி : ரஜினியின் ஒவ்வொரு படமும் அவரின் மற்ற படத்திற்கு எந்தவிதத்திலும் குறைவில்லாதது தான். இங்கு குறிப்பிட்ட கடைசி மூன்று படங்கள் கற்பனை தான் எனினும் அது உண்மையானால் நான் குறிப்பிட்டது போல ரசிகர்களுக்கு பெரிய விருந்து என்பது மறுக்கமுடியாதது தானே?!
இப்பதிவை நான் தொடர் அழைப்பது
ஆர்விஎஸ் அண்ணன் மற்றும் நண்பர் அப்துல் காதர்

படங்கள் தந்துதவிய கூகிளாண்டவருக்கு நன்றி!

                                                                                                                                                          

வியாழன், 25 நவம்பர், 2010

தலைப்பிடாதது இரண்டு

பழைய நண்பனை
எதிரில் பார்த்து
நலம் நோக்கி
விசாரித்தறிந்து
கடந்த நிகழ்வுகளை
நிகழுக்கிழுத்து
நடந்தபடி பேசி
மறுப்பின் பயனுதவாமல்
டாஸ்மாக் நுழைந்து
நினைவைக் கிளறிக் கொண்டே
முதல்மிடறு உள்ளிறக்க
இறங்கியோடுகிறது
மனைவியிடம் செய்த
சத்தியமொன்று...

*************************************************************************கடைசிவாய் உணவின்போது
வாசல் வந்துவிட்ட ஒருவனை
முழுங்கவும் முடியாது பேசவும் முடியாது
தலையசைப்பால் திருப்பியனுப்பி
தாழிட்டுத் திரும்ப
மென்ற சோறு உள்ளிறங்காதபடி
ஏதோவொன்று முட்டிநின்றது.திங்கள், 22 நவம்பர், 2010

சில பயணங்கள்!

உடைக்கும் தேவைகளற்று
நீளும் மௌன நிமிடங்கள்
தொடரும் சில பயணங்கள்..

வலிய இழுத்துப் பேசும்
உரையாடலின் முற்றுப் புள்ளியை
அவசரமாய் வைக்கத் துடிக்கிறேன்
வார்த்தைகள் எகிறத் துடிக்கும் கணத்தில்...

நேற்றைய தூக்கம் முழுதுமிருந்தும்
இமை மூடாமல், ஜன்னல் காட்சியின்
சிறுபிள்ளை  ஏக்கத்தால்...

சட்டென கவிந்து மேகம் தூவும்
சிறு சாரலும், தூரக் குழந்தைகளின்
விளையாடர்க் காட்சியும்
சோகப் பக்கங்கள் தாண்டிடும்
நினைவுப் புத்தகத்தில்...

சிநேகப் புன்னகையையும்
நாளிதழ் நீட்டலையும் வலிய மறுத்தும்
முகம் நோக்கும் எதிரிருக்கை பயணி..
மனிதர்களுடன் பயணித்தும்
பேசவிழையா பயணங்கள் சில..

இலக்கில்லா பயணங்களில்
துணையாகிப் போகிறது
நீள் மௌனமும்
நிமிடங்கள் தின்னும்
உன் நினைவும்...

                                    

வியாழன், 18 நவம்பர், 2010

ஜம்பம்

வெடுக்கென பேப்பர் பிடுங்கும் வெறுப்பும்
பின் கைதிணிக்கும் சாமான் கூடையும்
வரும் பசி தீர்க்கவெனக் கொண்டேன்..

பாத்திரம் கழுவும் நேரத்திலே
பக்குவமாய் பால்கோவா செய்யவும்
பாடம் எடுக்கிறாய் நீ..

நான் துவைக்க கிழியும் ஆடை
கிழியாமல் கறை நீக்கும் கலையை
யாரிடம் கற்றாய்...

பட்டமும் பின் தொடரும் நிர்வாகமும்
பதறுகிறது குழந்தை சமாளிக்கும்
உபாயம் அறியாமல்..

சட்டையில்லாமல் செய்த சமையலின்
வினையை வன்மமாய் உணர்த்தியது
வெடித்த கடுகு...

குனிந்து பெருக்கும்  போது
இடிக்கும் தொப்பை ஆறுமாத
உடற்பயிற்சி  நிறுத்தமெனக் கொள்!

ஒத்துக் கொண்டு சண்டை முடிக்கிறேன்
கோபத்தில் வீசியெறியும் பொருட்களிலும்
பட்டுத் தெறிக்கிறது உன் அன்பென..

டிஸ்கி : இது தங்கமணிகளின் சொல்பேச்சு கேளாமல்  பரேடு வாங்கும் அப்பாவி ரங்கமணிகளுக்கு அன்புடன்  சமர்ப்பணம். :)

பின் குறிப்பு : இது உன் "சொந்த சோகக் கதை"யா வென பின்னூட்டமிட நினைக்கும் அன்பு உள்ளங்களுக்கு, எனக்கு இன்னும் திருமணமாகவில்லை என நினைவு படுத்த விரும்புகிறேன் ;)


    

புதன், 10 நவம்பர், 2010

நான்!

கல்லிடறிக் கன்னத்தில்
காயம்பெற விழுந்து
காத்திருக்கும் கல்லூரிக்
கன்னிகளின் பெரும்சிரிப்பில்
அவசரமாய் எழுபவனோ..

இரவுப் பணி முடிந்து
கலைந்த தலையும் கண்சொருகும்
தூக்கமுமாய், அதட்டும் குரலில்
பெண்கள் இருக்கை விட்டு எழுபவனோ..

தவறுதலாய் கால்மிதிக்க
ஏச்சுப் பேச்சுக்களால் பிடரிக்
கண்ணுள்ள பெரும்பிராணியாய்
மாறிப் போகிறவனோ..

உயிரொடுக்கி மொழி மறந்து
ஊர் சேர, விரல் நடுங்கி
கண்பார்த்து யாசிப்பவனோ..

அடிக்கும் வெயிலிலும்
அரைகிளாஸ் டீயில்
அரைநாள் பட்டினி
துரத்துகிறவனோ...

வளைந்த மூக்கும் வடிவிலா தேகமும்
கொண்ட என்னை நோக்கி
முகம் சுளித்து இரண்டடித் தள்ளிப் போகையில்
கவனமாய்ப் பாருங்கள்
எனக்குள்ளும் உயிர்த் துடிப்பதை...

திங்கள், 8 நவம்பர், 2010

காதல் பெருமழை!

உனக்காக காத்திருந்த வேளைகளில்
நங்கூரமிட்டிருந்த என் நிமிடக் கப்பல்
உன் வருகையின் கணத்தில்
ஓடத் தொடங்கியிருந்தது உலகம் சுற்றிவர..

இதழ் சுழித்து பார்வை பேசும்
நேரத்தில் கவிந்திருந்த
கோபமும் காணாமல் போனது
வேகக் காற்றில் வெற்றுத் தாளென...

தயக்கங்களால் நிரம்பியிருந்த
நம்மிடைவெளி விரல் ஸ்பரிசங்கள்
தட்டி கவிழ்ந்தோடுகிறது
நம்மை நனைத்தபடி..

சுற்றும் பேச்சுக்கள் யாவிலும்
"நாம்" முன்னிலை, "நீ"  "நான்" படர்க்கை..
ஆடை நுழைந்து தேகம் தீண்டி நழுவும் காற்றில்
நம் காதல் வாசனை..


சிந்தும் இதழ் முத்தங்களால் 
மெல்லத் தொடங்கியிருந்தது 
காதல் பெருமழையொன்று..

                                                         

வெள்ளி, 29 அக்டோபர், 2010

கொடுங்கனவு!


சிரிப்பொலிகள் சதங்கையாடும் 
பூட்டிய வீடுகளின்
அமானுஷ்ய அதிர்வின்
அலைகள் துரத்தும்
பற்றியெரியுமென்
நிர்வாண தேகத்தின்
மயிர் கால்களிலிருந்து
வழியும் பிசுபிசுப்பான
திரவத் துளிகள் 
வழியெங்கும் பெருகியோட
கைகளுக்ககப் படா காற்றின்
கால்கொண்டு விரைந்தோடி
திரும்பவியலா திருப்பத்தில் 
உச்சி மலையின்
குச்சிக் கிளையினின்று
குதிக்கும் கணத்தில்
சுழற்றும் காற்றின்
பேரலறலில் வீரிட்டு விழிக்க
என் தேகம் நனைந்திருந்தது!


               

திங்கள், 25 அக்டோபர், 2010

ஊடல் பொழுதுகள்

தீண்டும் இன்பத்தில் திளைத்திருந்த 
என் விரல் தூரிகை 
உன் தேக வண்ணமில்லாமல் 
வறண்டிருக்கிறது இப்போது..


வளைகொலுசின்  செல்லச் 
சிணுங்கல்கள் கேளாமல் 
வாடிப் போயிருக்கிறோம் 
நானும் நம் காதற் பொழுதும்..விரும்பிவரும் நேரத்தில் 
விலகிப் போகிறாய் நீ 
கூடற்சரத்தின்  இன்றைய 
முத்து நழுவி விழுகிறது..


உன் இதழ் விரித்துச்  சிரிக்காமல்  
தலை சூடிக்கொள்கிறாய் பூவை
மலரிதழ் விரிக்காமல் 
மொட்டாகவே இருக்கிறது இன்னும்..


தயக்கங்கள் தட்டிவிட்ட 
இடைவெளியின் இருள் நேரத்தில் 
நமை சேர்க்க நாடி வந்து 
காத்திருக்கிறது நட்புத் தென்றல்.. 


கோபிப்பாயெனினும்
மன்னிப்பின் வார்த்தைகள் 
வரிசைப் படுத்துகிறேன் 
ஊடலின் ஜன்னலாவது திற..


  

புதன், 20 அக்டோபர், 2010

என்னைக் கொஞ்சம் கவனி!

தோட்டத்துச் செடிகளுக்கெல்லாம்
நீரூற்றும் போது சற்று விரல் தெளித்துப்போ
என் காதல் விதைக்கும்...

தெருநாய் பெறும் உன் வாஞ்சையின்
ஓரத்தையாவது பிய்த்துக்கொடு எனக்கு
வாழும் நாளெல்லாம் சுற்றி வருவேன் உன்னை...

கைக்குட்டையை உதறிச்செல் ஒருதரம்
உன் முத்தங்கள் சேர்ந்த  காற்றை
சிறைபிடித்து சுவாசம் நிறைத்துக் கொள்கிறேன்..

சிறுபுன்னகையாவது இட்டுப் போ இக்கணம்
முட்டி நிற்கும் இக்கவிதையின்
அடுத்தவரி அர்த்தமாகட்டும்...

பானைச் சோறனைத்தும் கேட்கவில்லை
பருக்கையாகவாவது சிந்திவிட்டுப்போ
உன் ப்ரியங்களை...


 

திங்கள், 18 அக்டோபர், 2010

நீவிர் பெருமனிதர்!

துப்பி வைக்கும் இடங்களிலெல்லாம்
பரப்பி விட்டுச் செல்கிறீர்
வதந்தியின் துர்நாற்றத்தை..

முதுகு வலிக்கும்  கனத்தை
எங்கும் இறக்காமல் கூனிட்டுச் சுமக்கிறீர்
பொறாமையின் பொதிமூட்டையை..

உம் அவமானத் துப்பல்கள்
வழிந்திடும் என் முகத்தை
எப்படிக் கழுவியும் அடங்கவில்லை
விசுவாசத்தின் எரிச்சல்..

எந்தக் கையும் கொட்டுவதில்லை
பொய்யுரைக்கும் கணத்தில்
நீவிர் பெருமனிதர் பாகையணிவதால்..

என்ன முயன்றும் எழுதி
விழுங்க முடியவில்லை; உம்
துரோகச் செருகலின் கசப்பை..

வெள்ளி, 15 அக்டோபர், 2010

தனிமைச் சாலை!

கொடி மின்னலின் வெளிச்சம் குடித்து
சரிந்து படுத்திருக்கும் பேரிருளில்
தனிமைச் சாலையில் நான்..

தடத்தாளத்திற்கு எதிர்ப்பாட்டெனயான
நிசிக்காற்றில் செவிவழி ஊர்ந்து
உயிரூடுருவும் ஊளைக்குரலொன்று..

அவசர மூச்சுக்களால் மயிர்க்காலின் வழி
பாய்ந்திறங்கும் வியர்வை ; பிழியும் உடைகள்
பரவும் புகையில் நாசியேறி சுவாசம் நிறையும்
பிணமெரியும் வாடை..

ஒத்தை மரம் கடக்க, அரவம் அருவுதலில் 
நினைவு சுற்றத் தொடங்கியது  கேட்ட
கதைகளில் ஆவிமையம் பிடித்து..

மனம் நடுங்கும் குளிரிலும் 
துரத்தவியலாமல் கூடவே பயணித்தது,
துணைக்கழைக்கா பயம்..


 

புதன், 13 அக்டோபர், 2010

பெருமழைக் காலம்..

ஊருறங்கிய நேரத்தில்
எழுதிச் சென்ற பெருமழையின்
வரிவடிவங்களாயின
தெருவிலோடும் சிற்றோடைகள்..

நேற்றைய வெண்மேகம்
திட்டுக்களாய் சிதறியிருந்தது
ஓட்டிடுக்கிலும் பூந்தொட்டியிலும்
குடைக்காளான்களாய்...

நிறைந்த ஊருணியில்
கரைந்து கலங்கிக் கிடக்கிறது
விடுமுறைநாளின்
விளையாட்டுமைதானமொன்று...

தொடரும் மின்னல்களும் கருத்தமேகங்களும்
காத்துக் கொண்டிருக்கின்றன
பறவைகளடையும் நேரத்திற்கு
மற்றொரு சமரம்புரிய..

முழுதும் காயா என் சட்டையிலும்
ஒட்டிக்கிடக்கின்றதொன்று
ஊரெங்கும் படிந்து கிடக்கும்
பெருமழையின் தீராவாசம்...திங்கள், 11 அக்டோபர், 2010

சிதறல்கள்!

பரிசுத்தம்..

கண்மூடி உதடுகுவித்து
விரைவாய் கன்னம் சிவந்து
மெலிதாய் முத்தமிட்டாய் என்னை

ஆழ்கடலில் மேலெழுந்த
முத்துச்சிப்பி பெற்ற
வான்மழையின் முதல் துளி போல்.

*********************************************

எத்தனை முறை விரட்டினாலும்
மீண்டும் வந்தமர்கின்றது
என்மனச் சுவரில்
உன் நினைவுப் பறவை..

*********************************************

ப்ரியம்..

உன் ப்ரியத்தின் கைகளால்
நட்ட பதியன்களில்
பூத்துச் செழிக்கிறது
முட்களில்லாத ரோஜாக்கள்...

********************************************

உன்ப்ரியத்தின் வருகை பார்த்ததும்
உயிர் பயத்தில் கொல்லைப்புற
சுவரேறி தப்பிச் செல்கிறது 
என் வெறுப்பின் சாத்தான்...

********************************************


மழை...

துளியாக விழுகிறது
மண்ணில்..
ஏதோ நிறைகிறது
மனதில்..

********************************************

காதல்..

ஒன்றும் ஒன்றும்
ஒன்றெனப்படுவது..


********************************************

இன்று..

நேற்றைய வேலைகளும்
நாளைய கனவுகளும்
சுமக்கும் மற்றொரு நாள்..

*******************************************

எப்போதும் மறுதலிப்பெனும்
ஒருவழிப் பாதையில் செல்லாதே..
உன்னை பற்றிச் சென்ற மனது
திரும்பி வர தடுமாறுதே...

*******************************************
   

வியாழன், 7 அக்டோபர், 2010

வரம்கொடு..

நகர மறுக்க சபிக்கப்பட்ட
மரமாகவேனும் நீ வரும் வழிகளில்
நிற்க மட்டும்  வரம்கொடு
இலையசைத்துப் ப்ரியத்தின்
தென்றலை திருப்பி விடுகிறேன்...

மறுப்பின் மொழிகளாவது
வீசிச்செல் வீதிகளில்
தேடிப்பிடித்து புழுதி துடைத்து
பத்திரப் படுத்திக் கொள்கிறேன்
ஞாபக அலமாரிகளில்...

ஒருமுறையேனும் திரும்பிப் பார்
உனைக்காண தவமிருக்கும் என்
நிமிட வேர்கள் உன் பார்வையீரத்தில்
சிலநாள் பிழைத்துப் போகட்டும்...

யாருக்கும் தெரியாமலேனும்
கொடுத்துவிட்டுப் போ
என்னிடமிருந்து பிடுங்கிய
உன்னைப் பற்றிய கனவொன்றையாவது...டிஸ்கி : இன்று பிறந்தநாள் காணும் எங்கள் பாசமிகு அண்ணன் தேவா அவர்களின் எண்ணம்யாவும் வெற்றியாய் அமைய இறைவனிடம் வேண்டுகிறேன்!


 

செவ்வாய், 5 அக்டோபர், 2010

மன்னாதி மன்னன் - மதுரை திருமலை நாயக்கர்.


அருமை நண்பர் வெறும்பய என்னையும் இந்த தொடர் பதிவுக்கு அழைத்து இருந்தார். அன்னாரின் அன்பை ஏற்று தொடர்கிறேன்.

மதுரையை ஆண்ட மன்னர்கள் ஆயிரமாயிரம் பேர். அம்மை மீனாட்சியின் ஆட்சியையும் சேர்த்து மதுரையை "கடவுளர் ஆண்ட பூமி" எனவும் கூறலாம்.  நான் பிறந்த ஊர் அல்லவா! :)  அவர்களுள் ஒருவரான மன்னர் திருமலை நாயக்கரைப் பற்றிய  தகவல்களை தொகுத்திருக்கிறேன். 
ஏற்கனவே அவரைப் பற்றி நிறைய அறிந்தவர்கள்,  இப்பதிவில் ஏதேனும் தகவல்கள் விடுபட்டிருந்தால் அல்லது தவறிருந்தால்  பின்னூட்டத்தில் பின்னவும் :)

சுமார் 207 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட நாயக்கர் மன்னர்களில் ஏழாவது மன்னராக மதுரையை தலைநகராகக் கொண்டு சிறப்பான முறையில் ஆட்சி நடத்தியவர் மன்னர் திருமலை நாயக்கர். தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்ட நாயக்கர்களின் மதுரை வருகை  இது போன்று இன்னும்  இரண்டு பதிவுகளுக்கு காரணமாகிவிடும் என்பதால் அதை அப்படியே நகர்த்தி வைத்து விட்டு திருமலை நாயக்கரை பற்றி மட்டும் பார்ப்போம்.

கி.பி. 1623 லிருந்து கி.பி.1659 வரை 36 ஆண்டுகள் ஆட்சி புரிந்த திருமலை நாயக்கரின் இயற்பெயர் திருமலை சவுரி நாயனு அய்யுலுகாரு என்பதாகும்.இவர் பிறந்த ஆண்டு கி.பி.1584. தந்தையார் பெயர் முத்துகிருஷ்ணப்ப நாயக்கர். பலதிறன்களும் அரசியல் விற்பன்னமும் திருமலை நாயக்கரின்  சிறப்பு.

திருமலை நாயக்கரின்  அண்ணன் முத்துவீர நாயக்கருக்குப் பின் அரியணை ஏறிய அவர் முதலில் திரிசிரபுரம் என்னும் இன்றைய திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சிசெய்து கொண்டிருந்தார். இளம்பருவத்தில் தொற்றியிருந்த "மார்ச்சளி" நோயினால் உடல்வலிமை குன்றியிருந்தார். காவிரிச் சூழலிலிருந்து மாறி மீனாட்சி சொக்க நாதருக்கு முறையான வழிபாடுகள் செய்யவும், மதுரையை தலைநகராகக் கொண்டால் அந்நோயிலிருந்து விடுபடலாமென மருத்துவன் ஒருவன் கூறிய அறிவுரைஏற்று மதுரையை தன் தலைநகராகக் கொள்கிறார் மன்னர். மருத்துவன் வடிவில் சோமசுந்தரக் கடவுளே வந்ததாகச் செவிவழிச் செய்திகள் உலவுகின்றன.


திருமலை நாயக்கரின் ஆட்சியில் பண்டைய பாண்டிய நாட்டின் பெரும்பகுதியும் திருவிதாங்கூரின் சிலபகுதிகளும் அடங்கியிருந்தது. டெல்லியிலிருந்து சுல்தானின் அச்சுறுத்தல்கள், மைசூரின் மன்னர்களின் படையெடுப்புகள்  இருந்தபோதும் நிலையான போரில்லாத, நீண்ட அமைதியான அரசை மக்களுக்கு அளித்தார். அவரின் ஆட்சியில் செல்வம் செழிக்க ஆரம்பித்தது. பெருகியசெல்வங்களை பல கோவில் திருப்பணிகளுக்கு செலவிட்டார். சைவ - வைணவ ஆலயங்களுக்கு சீரான திருப்பணிகளும் முறையான வழிபாடுகளும் தொடர்ந்திருந்ததைச் சான்றாகச் சொல்லலாம். ஒரு சைவக் கோவிலுக்கு அருகே ஒரு வைணவக் கோவிலையும் அதே சிறப்புடன் பராமரித்து வந்திருக்கிறார். ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள மடவார் வளாகத்தில் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது. அக்கோவிலில் உள்ள பெரிய நாடக சாலை மண்டபம் அவரால் கட்டப்பட்டது தான்.


அதே நேரத்தில் கிருத்துவ மற்றும் முஸ்லிம் அமைப்புக்களையும் ஆதரித்திருந்திருக்கிறார். அவருடைய ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதிகளை பாளையப்பட்டுக்களாக  பிரித்து அங்கு பாளையக்காரர்களை ஆட்சியதிகாரத்தில் அமர்த்தினார் நாயக்கர். மொத்தம் 76 பாளையப்பட்டுக்கள் சேர்ந்து திருமலை பேரரசாக திகழ்ந்திருந்தது. அவை இன்றைய  தேனி, நெல்லை,மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் இடங்களில் இருந்திருந்தது. பின்னாளில் வீர பாண்டிய கட்டபொம்மனும், மருது பாண்டிய சகோதரர்களும் இன்ன பிற சிற்றரசர்களும் இப்பாளையக்காரர்களின் வழித்தோன்றலே என்பது செய்தி. 

கோவில் சீர்திருத்தத்தில் அவர் காட்டிய அக்கறை அவரது திறன்களை தெளிவாக்குகிறது. மீனாட்சியம்மன் திருவிழாவை சித்திரை மாதத்திற்கு மாற்றியது, அத்திருவிழவை வெகுசிறப்பாக நடத்தி சைவ - வைணவர்களை ஒன்றென இணைத்தது, வசந்தமண்டபம் கட்டியது, மீனாட்சியம்மன் கோவிலை மிகச் சிறப்பாக எடுத்துக் கட்டியது, தெப்பத் திருவிழாவை உருவாக்கியது என அவர் செய்த சாதனைகள் பல. திருமலை நாயக்கரின் காலத்திற்கு முன்பு வரை மீனாட்சியம்மன் திருவிழா சைவர்கள் மட்டுமே கொண்டாடும் விழாவாக இருந்தது என்பதை இவ்வுடன் நினைவுகூர விழைகிறேன். 

மீனாட்சியம்மன் கோவிலிலுள்ள முக்குருணி விநாயகரின் பெரிய சிலை கோவில் விரிவாக்கத்திற்காக மண்ணெடுக்கும் போது கண்டெடுக்கப்பட்டு, அது கோவிலிலேயே நிறுவப்பட்டிருக்கிறது. மண்ணெடுக்கத் தோண்டிய இடம் இன்றைய மாரியம்மன் தெப்பக்குளமாக சாட்சியென இருக்கிறது.  

இன்றைய மதுரை, திருமலை நாயக்கரின் ஆக்கம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.மதுரையின் தெருக்கள், ஆலயங்கள், அவரது ஆட்சியிலிருந்த ஊர்களிலுள்ள ஏரிகள் எல்லாம் அவரது ஆக்கங்களே. இன்றோ அவ்வேரிகளில் பாதிக்கும் மேல் தூர்வாராமல் குடியிருப்புக்களாக மாறிவிட்டிருக்கின்றன.

அவரது ஆட்சியில் மற்றொரு சிறப்பு மிக்க ஆக்கம் அவரது மாளிகை. திருமலை நாயக்கர் மஹால் என்று இன்றும் பொலிவுடன் விளங்கும் அவரது அரண்மனை கட்டிய பொழுதில் இருந்ததில் நான்கில் ஒரு பகுதியே மிச்சமிருக்கிறது. தற்போது தமிழ் திரைப்படங்களின் சூட்டிங் ஸ்பாடுகளில் ஒன்றென மாறியிருந்தது காலத்தின் கோலம் :(  

எழில் வாய்ந்த இந்த அரண்மனை கி.பி.1639 ஆண்டு இந்தோ- சாரசீனிக் முறைப்படி ஒரு இத்தாலிய பொறியியல் வல்லுனரால் கட்டப்பட்டது. சாரசீனிக் முறை என்பது முஸ்லிம் கட்டடக்கலையாகும்.இதில் சொர்க்க விலாசம் மற்றும் ரங்க விலாசம் என இரண்டு பகுதிகள் இருந்திருக்கின்றன. முன்னதில் திருமலை நாயக்கரும் பின்னதில் அவரது தம்பியும் அவர்களின் வாழ்நாள்வரை இருந்திருக்கிறார்கள். இது தவிர 18 இசைக்கருவிகள் இசைக்கும் இடம், படைகலன் வைக்கும் இடம், பூஜை செய்யும் இடம், அரியணை மண்டபம், தேவியரின் அந்தப்புரம், நாடக சாலை, மலர் வனங்கள், பணியாளர் வசிக்குமிடம் என பல இடங்கள் வடிவமைக்கப் பட்டிருந்தன.


சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு... 


இந்த அரண்மனையிலிருந்து மீனாட்சியம்மன் கோவிலுக்கு சுரங்கப் பாதையொன்று இருந்தது எனவும் காலப்போக்கில் அது அழிந்து விட்டது எனவும் கூறுவர். இன்றும் மீனாட்சியம்மன் கோவிலிலுள்ள பைரவர்  சன்னதிக்கு எதிரேயுள்ள சிறுகிணறு சுரங்கப்பாதையின் வழியென கூறுகின்றனர். 

சீரும் சிறப்புமாக மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் தனது 75  வது வயதில் உயிர்நீத்தார்.உப செய்தியாக,  வீரப் பெண்மணி ராணி மங்கம்மா திருமலை நாயக்கரின் வழித்தோன்றலே! தமிழகத்தையாண்ட பெரும்புகழ் படைத்த மன்னர்களான கரிகால்சோழன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், நரசிம்மபல்லவன், ராஜராஜசோழன், ராஜேந்திரசோழன் இவர்களின் வரிசையில் மன்னர் திருமலை நாயக்கருக்கும் இடமுண்டு என்பது மறுக்க முடியாத வரலாறு.

மீனாட்சியம்மன் கோவிலுக்கோ அல்லது மதுரைக்கோ நீங்கள் செல்லும் பொழுது செம்மையாக ஆண்ட  திருமலை நாயக்கரின் நினைவு ஓரிரு நொடிகள் வந்தாலே இப்பதிவின் நோக்கம் முற்றுப்பெறும்.

இப்பதிவிற்கு உதவிய தளங்களுக்கு நன்றி!    

வெள்ளி, 1 அக்டோபர், 2010

உருமாற்றம்...

மிக மிருதுவான கைகள் உன்னுடையது
பட்டின் ஸ்பரிசமும் பனிக்காற்றின்
குளுமையும் கொண்டதது...

பிறந்த சிசுவின் பூம்பாத நிறமும்
மல்லிகை மணமும் நிறைந்ததது

மேகத்தினூடே மின்னலென
ரேகைகள் ஓடும் வெளியது...

வீசிநடக்கும்போது விரல்கள்
செய்யும் நடனத்தின் பாவம்...

செதுக்கப் பட்ட நகங்களும்
நடுவிரல் நுனிமச்சமும்
அழகு சேர்த்தது அதற்கு..

கைதவறியுடைந்த பூந்தொட்டிக்காய்
விரல்பதிந்த குழந்தையின்
கன்னம் பார்த்தபின்

கோபச் சாத்தானின்
சவுக்காகிப் போயிருந்தது
உனதிந்த கைகள்..


 

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

நிகழாத் தூக்கம்..

வலிய இழுத்துப் பிடித்த உறக்கமொன்று
பாதிக் கனவில் கரைந்து  போனது
திறக்கவியலா  கண்ணெரிச்சலும்
கடக்கவியலாத் தொலைவொன்றுமாய்...

வெளியேறும் தணல் மூச்சுக்களில்
மெல்லப் புகையத் தொடங்கியிருந்தது
தூக்கம் சிறை வைக்கத் தெரியா
தலையணையும் வெண்பஞ்சு மெத்தையும்...

அறைதப்பிப் போன தூக்கம்
துரத்திப் பிடிக்கவியலாமல்
சுற்றிக் கொண்டிருந்தது நினைவு
இதயம் கிழித்த வலியொன்றில் ...

எண்திசை நீண்டு காத்திருக்கும் கனவுகள்
தூக்கவாசல் திறப்பிற்காய்
கனவுகளின் காவலனாகிப் போனாலும்
உறக்கத் தாழுடைத்து உள்ளேறும்
வழியேதும் உண்டோ?


 

சனி, 25 செப்டம்பர், 2010

புரிதல்...

வழியில் எதிர்ப்பட்ட
பார்வையற்றவரின் உலகம்
எப்படியிருக்குமென்று அறிய
கண்களை கறுப்புத்துணியால்
கட்டிக்கொண்டு நடக்கிறாய் நீ!

எப்படியும் இன்னும் சில நிமிடங்களில்
கட்டவிழ்ந்துவிடுமென்ற  தைரியத்தில்
சூழும் இருளும் உனக்கு ஒரு
சாகச விளையாட்டாகிறது, அது அவனது
விலக்கமுடியா சிறை என்பதறியாமல்!...
டிஸ்கி : இது பார்வையற்றவரின் மேல் பரிகாசமோ அல்லது பரிதாபமோ என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று வேண்டுகிறேன். சக மனிதனின் வலியை நாம் ( நம்மில் பலர் ) எவ்வாறு மேலோட்டமாக  புரிந்து கொள்கிறோம் என்பதைச் சொல்லுவதாகவே இதை எடுத்துக் கொள்க!

 
 

புதன், 22 செப்டம்பர், 2010

நீ...நான்!

இடைவிடாத தென்றலின் 
அழைப்புக்களுக்கு தலையசைக்காத 
இலைகளென உனைச்  
சுற்றியலையும் என் 
ப்ரியத்தின் கேவல்களுக்கு 
மௌனப் பரிசளிக்கிறாய் நீ!..

பிடித்த விரல் நழுவவிட்டு 
தொலைந்துபோன 
குழந்தையின் தவிப்பென
எனையுதறி உனைச்
சுற்றியலையும் மனத்தால் 
தவித்தலைகிறேன் நான்!..

*******************************************************************************

தோழியருகே இடமில்லாமல் 
என்னருகே நீயமர்ந்து வந்த 
பேருந்துப் பயணத்தில்..
உன்னை முதலாய்ப் 
பார்த்த கணத்திலிருந்து 
நினைவுகள் மீட்டி 
பதற்றமாய் உன்னைச் 
சுற்றிப் பின்னிக்கொண்டிருக்க
எனைக் கவனியாது போல் 
முன்னிருக்கை குழந்தைக்கு 
முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறாய் நீ!..


   

திங்கள், 20 செப்டம்பர், 2010

நட்பின் பகை!


நேற்றிரவு சண்டையிட்டுக் கொண்ட 
நண்பர்கள் அறையில் வேறெதுவும் 
உடைந்து  சிதறியிருக்கவில்லை,
சில கண்ணாடித் துண்டுகளும் 
நட்பின் நம்பிக்கைகளும் தவிர...

தெரு முழித்துக் கொண்டதையும்
பேசித் தீர்க்கவியலாப் பிரச்சனை 
இல்லையெனவும் விலக்கிய
நண்பன் விளக்கினான்..

காலி மதுபுட்டிகளும் 
கவிழ்ந்திருந்த கோப்பைகளும் 
மெலிதாய் சிரித்துக் கொண்டிருந்தன 
நடந்த சண்டைக்கு சாட்சியென...

கைகிழிந்த காயத்தின் வலியும்
புரிதல் செத்த நிமிடங்களும் 
மிஞ்சியிருக்கின்றன
பரஸ்பர மன்னிப்பின் 
வார்த்தைகளை எதிர்நோக்கி!...    


புதன், 15 செப்டம்பர், 2010

கொல்லும் சொல்!கொல்லும் சொல்!


ஒரு சொல்
போதுமானதாயிருக்கிறது
சில தருணங்களில்..
கண்ணீரைப் பீறிட வைக்க
தீராக்கோபம் கொளுத்த
ப்ரியத்தின் அணைப்பை சந்தேகிக்க
அவிழ்க்கமுடியா முடிச்சுகளிட
மனக்காயத்தில் விரல்சுண்டும்
வலியுயர்த்த..
நமக்கிடையேயான
தொடும் இடைவெளியை
பேரண்டத்தின் பெருவெளியாக்க...
சட்டென!


சட்டென நிகழ்ந்துவிடுகிறது சில..
ஓர் அலட்சியப் பார்வை
ஒரு புறக்கணிப்பின் தள்ளல்
ஒரு பிரிதலின் இடைவெளி...
பறந்துகொண்டிருக்கும்
உறவின் மெல்லிய நம்பிக்கை
நூல் அறுபட...

                                            

திங்கள், 13 செப்டம்பர், 2010

என்னைக் கொஞ்சம் விடுவி!

ஒட்டிவைத்திருக்கும்
உன் இதழ்கள் பிரி
மொழிகளோடு சில
முத்தங்கள் சிந்தட்டும்..

மூடியிருக்கும் இமைகள் திற
உன் நினைப்பில் எரியும்
என்னுருவம் தெரியட்டும்..

உன் இடுப்பேற தவித்து
நிற்கும் என் ஏக்கக் குழந்தையை
மறுக்காமல் கொஞ்சம்
தூக்கிக்கொள்
உயிரையெடுக்கும் அதன்
அழுகை அடங்கட்டும்...

மூடிவைத்திருக்கும்
விரல்கள்பிரி சிறைபட்டிருக்கும்
என்னுலகம் நழுவி
கீழே விழட்டும்...

                          

புதன், 8 செப்டம்பர், 2010

திசைமாறிய கனவுகள்!

கலைந்து கிடக்கும் கனவிலெல்லாம்
ஒளிந்து கிடக்கிறது ஏதோவொன்று
நிகழாக் கணத்தின் ஏக்கப் பிம்பமென
மாற்றிக்காட்டும் கடந்த நிகழ்வென...


நனவின் இடைவெளித் தருணம் 
முயன்று தோற்கிறது இணைக்க
முன்கனவின் நிலையில்லா நிலையையும்
பின்கனவின் தொடர்பில்லா தொடர்பையும்...


கனவின் மீதேறிப் பயணித்த புரவியொன்று
திக்குத் தெரியாமல் தவித்தலைகிறது
பெருங்கூட்டின் வெளித்திடலில்
திசைமாறிப் போன கனவுகள் காணாமல்...


விழிக்கும் நிலைவரை தொடர்ந்திருந்தும் 
தொங்கி நிற்கிறது துறட்டிகளில்
தோலுரித்த முண்டங்களென
நேற்றைய கனவுகள்...


                                                                             

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

உன் அன்பு!

இதமென்னும் பூங்குழலில்
இசைத்திடும் இனியகீதம்
நீ சொல்லும் மொழிகள்...

வழியெங்கும் வசந்தத்தின்
வடிவங்கள் வடிக்கிறாய்
வார்த்தைகளின் வழி..

எழில்மிகு வனப்புகளின்
ஏற்ற இறக்கங்கள்
கொளுத்தும் மோகத்திரி...

குளிர்ந்து பொழிந்து
சிலிர்ப்பின் வேர்கள் நனைக்கும்
உன் பார்வைத்துளிகள்..

தனிமை இருள்வெளியில்
வண்ணம் வரையும் உன்
அணைத்தவிரல் தூரிகை...

திக்கற்ற காட்டின் வழிப்பாதையென
வாழ்வில்  எப்போதும்
துணைவரும் உன் அன்பு..!


                                                 

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

முதலிரவன்று!

பாதித்தூக்கத்தில் முழித்துக்கொண்ட
பின்னிரவில் படுக்கையில் புரளும்
பல நினைவுகள்..

கலைந்த போர்வைக்குள்ளே
கலையாத முகம் நீட்டி
பற்கள் காட்டும் சில நினைவுருவங்கள்..

கண்மூடி யோசனை மூடாது
நினைவின் சிறகுகள் அமரும்
நிகழ்வின் பல கிளைகள்...

தொடுக்கும் பூமாலையின்
வரிசையென ஒன்றைத்
தொடரும் மற்றொன்றின் நினைவு...

பயத்தைத் துணைக்கழைத்து
காதல் கைப்பிடித்து
வெறுப்பில் குளித்து
இயலாமையில் நெளிந்து
நிர்பந்தத்தில் மூழ்கும்
சில நினைவுகள்..

தெரியவேயில்லை எந்தவொரு
நினைவின் மீதியின் மிச்சதிலும் கூட..
களைத்துறங்கும் மனைவியின் முகம்!

 

                                                                         

புதன், 1 செப்டம்பர், 2010

அந்நாளின் மழை!

தனிவழி போன பாதையில் 
துணையென வந்து
வீடு சேர்த்தது அந்நாளின் மழை..

உன்வரவால் வசந்தங்கள் பூத்த 
நாளின் மலர்ப்பனியாகிப் போனதது..

மண்வாசமும், ஒருகுடையில் நடக்கும்போது
உன்வாசமும் தந்ததது...

அலையடிக்கும் கரையில் ஆடிக்களைத்தபோது 
குதூகலத்தின் குரலென கொட்டித்தீர்த்ததது..

மார்கழிப் பின்னிரவில் மையல் நீளும் 
பொழுதில் மோகத்தின் சாரலென ஆனதும்..  

இதழ்வருடி மேனியூர்ந்து தடம் பதித்த நாளின்
உயிர்த் துளியாகிப் போனதுமது..

ஓரிரவில் உனைத்தூக்கிப் போனபின்
இழப்பின் கண்ணீராய்ச்  சிந்தியதும்  இம்மழை தான்!

                                                                                                     

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

நிழல்களின் நடனம்

ஒவ்வொரு இரவிலும் கதைகேளாமல்

தூங்கியதில்லை என் ப்ரிய மகள்..

கதையாரம்பித்த கணத்தில்

எனை நிறுத்தித் தொடரும் பலசமயம்

வெள்ளையானையும் கொம்பு முளைத்த சிங்கமும்

உலவும் அவள் காடுகளில்..

மீன்கள் பறக்கும் மான்கள் நீந்தும்

புலிகள் சிரிக்கும் சில நேரங்களில்..

அவள் 'மம்மு'வில் பங்குண்டு

எல்லா மிருகங்களுக்கும்..

கரடியும் முயலும் அவளுடன்

போகும் வகுப்புகளுக்கு வாகனமேறி..

பாதிக் கதையில் மெல்ல முனகி

தூங்கியபின் இதமாய் பதித்து வெளியேறுகையில்

கட்டிலைச் சுற்றியலையும் காற்றில் தொடங்கும்

அவளுருவாக்கிய மிருகங்களின் நடனம்..


 

புதன், 25 ஆகஸ்ட், 2010

பிரிவிற்குப் பின் (அ) கையாலாகாதவன்

நடந்த அவலங்கள் கடந்திட
விழையும் அர்த்தமற்ற
விவரிப்புகளின் வழி..

உறவுச் சிக்கலின் முடிச்சுகளில்
இறுகி ஊசலாடும்  
நம்மாசை உணர்வுகள்..

வாழுமாசை வற்றினும்
வெற்றுயிர் சுமக்கும்
ஈர நிர்பந்தங்கள்..

தடமளித்த கண்ணீரும்
கனவின் பிம்பமும்
மீதமுனக்கு..

சோகம்நீளும் சொற்களும்
தீரா நினைவும்
துணையெனக்கு..

முடிவிலா இரவைத்துணைக்கழைத்து
ஊளையிடும் என் ஊமைக்காதல்.

                                                                 


                                                          

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

அம்மா!

தேவைக்களவாய் வேலைக்குச்
சரியாய் சமைக்கவே
மாட்டாள் அம்மா..

என் நட்பின் வருகை
நா தித்திப்பில்லாமல்
திரும்புவதேயில்லை..

எதிர்வீட்டு காயத்திரிக்கும்
பக்கத்துவீட்டு ஜோதிக்கும்
அவள்தான் ஊட்டவேண்டும்
மதியங்களில்..

முன் காக்கைக்கும்
பின் நாய்க்கும் வைக்கத்
தவறுவதேயில்லை ஒருநாளும்..

எந்தப் பிச்சைக்காரனும்
வெறுந்தட்டுடன் வீடு
கடப்பதேயில்லை அவள்முன்னால்..

முன்னறிவிப்பின்றி பின்னிரவில்
வீடுசேரும் நாளிலும்
தீர்ந்து போவதேயில்லை
பானைச் சோறும்
அம்மாவின் அன்பும்..

                                  

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

அவசரம்

ஒழுங்கின்மையின்  பெருக்கல் குறியென
வழிமறிக்கும் வாகனங்கள்
ஒவ்வொரு சாலை விளக்கிலும்..
கேளாமல் செய்தவுதவி
பெற்றுத் தந்ததேயில்லை
சிறு புன்னகையை..
தோன்றுமிடத்திலெல்லாம்
வரிசையுடைக்கும் சிலபேர்..
அவதியின் காலடியில் நசுங்கும்
நம் நன்றி சொல்லும் நிமிடங்கள்...
கால் மிதித்தலில் கவனமாய் திரும்பிக்கொள்ளும்
காணா முகமும் மன்னிப்பின் வார்த்தைகளும்..
முந்திச் செல்லும் முயற்சியில் எப்போதும்
முன்னிருப்பவர் மேல்  முட்டி நிற்கின்றன
நம் அவசர அலட்சியங்கள்..